ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய அரசு அக்கறை காட்டியதே இல்லை என ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் ஒன்றிய அரசை கனிமொழி எம்பி குற்றம்சாட்டிப் பேசினார்.தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது என தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. ஒன்றிய பாஜ அரசு இதனை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மெத்தன போக்கை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கையில் கருப்புக் கொடி ஏந்தியும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் 3,544 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் பிரச்னை குறித்து பாராளுமன்றத்தில் பலமுறை நாங்கள் எடுத்துரைத்தும், ஒன்றிய அரசு செவி சாய்ப்பதே இல்லை. இந்தாண்டு இதுவரை 77 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற மீனவர்களின் கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு அக்கறை செலுத்தவே இல்லை. ஒன்றிய அரசு இது ஏதோ தீர்க்க முடியாத பிரச்னை என்பது போல் இருக்கிறது.அயல்நாடுகளில் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை இன்றி கடல் எல்லைப்பகுதியில் சமரசமாக பாதுகாப்பாக மீன்பிடிக்கின்றனர். ஏன் இலங்கை, இந்திய மீனவர்கள் இடையே உள்ள பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை.
நம் தமிழக மீனவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை. மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி உள்ளோம். இதில் அதிமுக, பாஜ கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை விலங்கு மாட்டியபடி திருப்பி அனுப்புகின்றனர். அதை பற்றி ஒன்றிய அரசு எதாவது கேட்டது உண்டா. நாட்டின் சுயமரியாதையை காப்பாற்ற முன் வராத ஒன்றிய அரசு, இந்த நிலையை செய்திப் பத்திரிகைகள் எதிர்த்து கேள்வி கேட்டாலோ, சித்திரம் வெளியிட்டாலோ உடனே கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது.இவ்வாறு பேசினார்.
* ராமேஸ்வரத்தில் பிப். 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகளை பறிமுதல் செய்து, 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் மீனவப் பிரதிநிதி சேசுராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் இரண்டு வருடம் வரையிலும் தண்டனைக் கைதிகளாக உள்ள 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பிப். 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்கள் மற்றும் அதை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து, மண்டபம் மீனவர்கள் 2வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் ரூ.6 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
* காரைக்காலில் 6வது நாளாக ஸ்டிரைக்
இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 27ம் தேதி காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவத்தை கண்டித்து தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் விசைப்படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டி காரைக்கால் மாவட்ட 11 கிராம மீனவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் போராட்டத்தின் ஒருபகுதியாக 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று இலங்கை கடற்படை காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மீனவக் கொடியை கையில் ஏந்தி சென்று ஊர்வலத்தில் பங்கேற்றனர். மீனவர்கள் தொடர் போராட்டம் காரணமாக சுமார் ரூ.10 கோடி அளவில் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.