ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து நேற்று காலை 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து ஒரு படகையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
சிறைபிடித்த மீனவர்களை நடுக்கல் பகுதியில் வைத்து விசாரணை நடத்தி தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர். சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.