*காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் புதிய மீன் இறங்கு தளத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்து மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
ராமேஸ்வரம் தீவு துறைமுக பகுதியில் நபார்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.22.93 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் டி.ஜெட்டி பாலம், 150 மீட்டர் படகு அணையும் தளம் பணி மற்றும் குந்துகால் பகுதியில் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் மீன் இறங்கும் தளத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி மூலம் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் எம்பி நவாஸ்கனி, எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் ஜெட்டி பாலத்திற்கு சென்று கடலில் மலர்களை தூவி புதிய மீன் இறங்கு தளத்தை பார்வையிட்டனர்.
இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், குந்துக்கால், மண்டபம், மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் இறங்குதளம் உட்கட்டமைப்புகளை தேவைக்கேற்ப விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி மீனவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் நலத்திட்டங்களும் மகளிர்களுக்கு சுழல்நிதி திட்ட கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற்றிட வேண்டுமென தெரிவித்தார்.
பின்னர் பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மானிய திட்டத்தில் கலெக்டர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, சேர்மன் நாசர்கான், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல்காதர் ஜெய்லானி, ஜெயக்குமார், உதவி செயற்பொறியாளர் ஹரி, துணைச் சேர்மன் தெட்சிணாமூர்த்தி, திமுக மாநில தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், மீனவ பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.