*தெற்கு ரயில்வே உத்தரவு; சீசன் டிக்கெட் பயணிகள் அதிர்ச்சி
*ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வேலைக்கு செல்வோருக்கு சிக்கல்
மானாமதுரை : தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ராமேஸ்வரம்-சென்னை போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் டி-ரிசர்வ் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு சீசன் டிக்கெட் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய ரயில்வேயில் ரிசர்வ்டு டிக்கெட், அன் ரிசர்வ்டு டிக்கெட் தவிர, டி-ரிசர்வ்டு டிக்கெட் என்ற மூன்றாவதாக ஒரு வசதி உள்ளது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இந்த முறையை பயன்படுத்தி முன்பதிவில்லாத டிக்கெட்டை வைத்து முன்பதிவுள்ள ஸ்லீப்பர் கோச்சுகளில் பயணம் செய்ய முடியும்.
இது, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பதிவு செய்யாமல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் ஆகும். இதன் மூலம், குறைந்த தூரம் பயணம் செய்பவர்கள், இருக்கை முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம். இந்த டிக்கெட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால், முழு பயணத்திற்கும் ஸ்லீப்பர் டிக்கெட் தேவையில்லை. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க விரும்பும் குறுகிய தூர பயணிகளுக்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கொரோனா காலத்திற்கு பின் இந்த வசதியை இந்திய ரயில்வே அனைத்து மண்டலங்களிலும் அறிவித்தது. இந்த டி-ரிசர்வ் டிக்கெட்டுகள் எல்லா ரயில்களிலும் கிடைக்காது. தெற்கு ரயில்வேயில் 32 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 2 பெட்டிகள் இந்த டி-ரிசர்வ்டு கோச் என ஒதுக்கப்பட்டது.
இதன் மூலம் குறிப்பிட்ட பீக் அவர்ஸ் நேரங்களில், இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் டி-ரிசர்வ் டிக்கெட் எடுத்து முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியும். மேலும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் இந்த பெட்டிகளில் பயணிக்கலாம்.
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடியை சேர்ந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்ட சீசன் டிக்கெட் பயணிகள் தினமும் ராமேஸ்வரம்-சென்னை போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரத்திற்கு ஒன்றிய, மாநில அரசு பணிகளுக்கு தினமும் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே இந்த டி-ரிசர்வ் கோச் வசதியை வரும் ஜூலை 2ம் தேதி முதல் போட்மெயிலில் ரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருப்பதற்கு சீசன் டிக்கெட் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு ெதரிவித்துள்ளனர்.
ஒன்றிய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?
பயணிகள் சங்க நிர்வாக கங்காதரன் கூறுகையில், தெற்கு ரயில்வே ராமேஸ்வரம்-சென்னை போட்மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2021ம் ஆண்டு முதல் எஸ்11, எஸ்12யை டி-ரிசர்வ் கோச்சாக அறிவித்து முக்கிய ரயில் நிலையங்களில் டி-ரிசர்வ் டிக்கெட் ெபறும் வசதியை அறிவித்தது.
ராமேஸ்வரம் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பிவிடும். முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள் டி-ரிசர்வ் டிக்கெட் பெற்று ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி வரை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்து வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலங்களில் வேலை செய்து வரும் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்த சீசன் டிக்கெட் பயணிகளுக்கு இந்த டி-ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்வது வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த வசதியை தெற்கு ரயில்வே ரத்து செய்திருப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.