சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் சமூகநீதியைக் காக்கவும், நிலைநிறுத்தவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும், விழிப்புணர்வும் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் தேவையை 44 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.
எனது இந்த கோரிக்கையில் உள்ள நியாயத்தை சாலையோரங்களில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் கூட புரிந்து, சமூகநீதி மாணவர்களாக மாறினார்கள். ஆனால், அந்த சமூகநீதிப் பாடத்தை அரசு இன்னும் படிக்காதது ஏமாற்றமளிக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து தமிழக மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.