விழுப்புரம்: இழிவுபடுத்தியதாக ராமதாஸ் குற்றம்சாட்டியநிலையில், கடலூரில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் காடுவெட்டி குரு பற்றி அன்புமணி புகழாரம் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018ல் மறைந்தபோது அவரது மனைவி லதா, மகன் கனல்அரசன், மகள் விருதாம்பிகை, மருமகன் மனோஜ் உள்ளிட்டோர் ராமதாஸ், அன்புமணி குடும்பம் மீது விரக்தியில் இருந்தனர். கட்சிக்காக, இனத்துக்காக உழைத்த குரு, இழிவுபடுத்தப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன. இவ்விவகாரம் பாமக, வன்னியர் சங்கத்தில் பெரிதும் புகைச்சலை கிளப்பின. அதோடு இவற்றுக்கெல்லாம் காரணம் அன்புமணி தான் என்று குற்றச்சாட்டும் எழுந்தது.
தற்போது ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு பின் கடந்த 29ம்தேதி செய்தியாளர்களை தைலாபுரத்தில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குருவை அன்புமணி மதிக்கவில்லை, இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்தார். இது காடுவெட்டி குடும்பத்தினர் ஏற்கனவே எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மிகவும் வலுசேர்ப்பதாக அமைந்தது. அதோடு காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ராமதாசின் பேச்சை வரவேற்றனர்.
இந்நிலையில், கடலூரில் நேற்று முன்தினம் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தின்போது பேசிய மூத்த நிர்வாகிகள், கட்சிக்குள் நிலவும் பிரச்னைக்கு கடலூர்காரர்கள்தான் காரணம், பிளவுகளை ஏற்படுத்துபவர்களை நெருங்க விடக்கூடாது, ராமதாசின் புகைப்படங்களை சேதப்படுத்தியவர்களை மறக்கக் கூடாது என ஆவேசத்துடன் பேசினர். தந்தை- மகன் இருவரும் சிந்திக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, ‘‘எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த ராமதாஸ் வழியில்தான் இனியும் செல்வேன். நமது கட்சியில் சில குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. எனது அண்ணன் காடுவெட்டியார் இருந்தால், இதுபோன்ற குழப்பங்கள் கட்சியில் ஏற்பட்டிருக்காது. குழப்பம் வராமல் பார்த்துக் கொண்டு இருப்பார். நாம் அவற்றை முறியடிப்போம். மண்ணையும், மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளேன்’’ என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பாமகவில் உள்கட்சி விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளன. காடுவெட்டி குரு பாமகவில் முன்னணி தலைவராகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியபோது கட்சி தலைமையுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக அவரது கடைசி கால நிகழ்வுகள், அதன்பிறகு எழுந்த விமர்சனங்களை யாரும் மறைக்க, மறுக்க முடியாது. அன்புமணியின் செயல்பாடுகளால்தான் ராமதாஸ்கூட காடுவெட்டி குரு விவகாரங்களில் அமைதி காத்ததாக தகவல் பரவின. தற்போதைய வன்னியர் சங்க தலைவரான பு.தா.அருள்மொழி, ராமதாஸ் பக்கம் உள்ளார். பெரும்பாலான வன்னியர் சங்க நிர்வாகிகளும் ராமதாஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தைலாபுரத்தில் கடந்த மாதம் நடந்த வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தின்போது இது நிரூபணமானது.
இந்நிலையில் காடுவெட்டி குருவை அன்புமணி திடீரென புகழ்ந்து பேசியிருப்பது பாமகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காடுவெட்டி குரு இருந்தால் கட்சிக்குள் குழப்பம் வந்திருக்காது, என அன்புமணிக்கு இப்போதுதான் தெரிய வருகிறதா? அவர் உயிரோடு இருக்கும்போதும், இறந்த பிறகும் அவரது குடும்பத்தினருக்கு பாமகவுடன் விரிசலுக்கு யார் காரணம்? என்ற கேள்வி ஒருபுறம் எழுந்திருக்க, திடீரென அன்புமணி குருவின் புகழ்பாட வேண்டிய அவசியம் என்ன? என்ற விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் எழுந்துள்ளன.
அன்புமணியின் இத்தகைய திடீர் செயல்பாடுகளால் வன்னியர் சங்க நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. தைலாபுரம் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள வன்னியர் சங்கத்தின் கவனத்தை திசை திருப்பவே அன்புமணி இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார் என்று ராமதாஸ் ஆதரவாளர்கள் முணுமுணுத்து வருகின்றனர். அன்புமணியின் இந்த கருத்துக்கு, ராமதாஸ் விரைவில் பதிலளிப்பார் என்று தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட செயலாளர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு
கடலூரில் நேற்று முன்தினம் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்புமணியை வரவேற்பதற்காக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூர் முதுநகரில் பாமக நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இதனால் கடலூர் பாரதி சாலை, சிதம்பரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலை பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே அனுமதியின்றி கூட்டமாகவும் ஊர்வலமாகவும் நடந்து சென்றதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் மாவட்ட செயலாளர் உள்பட பாமகவினர் 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
‘மனக்கசப்பு நீர்க்குமிழி போன்றது’
மேட்டூர் எம்எல்ஏவும், சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான சதாசிவம் நேற்று அளித்த பேட்டியில், ‘பாமகவில் நிறுவனருக்கும், தலைவருக்கும் உள்ள மனக்கசப்பு நீர்க்குமிழி போன்றது, நீர்க்குமிழி போல் அது காணாமல் போகும்’ என்றார்.