ராமபிரான், லட்சுமணனுடன் சீதாதேவியை தேடி ராமேஸ்வரத்திற்கு வந்து அங்கு ராமநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். இந்த ராமேஸ்வரத்தை சுற்றிலும் ராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள் உள்ளன. அவற்றில் ராமபிரான் வானர வீரர்களுடன் ஆலோசனை செய்த கந்த மாதன பர்வதம், சேதுக்கரை, தேவிபட்டினம், திருப்புல்லாணி ஆகியவை முக்கியமானவை. நவபாஷாணம்’ என்று அழைக்கப்படும் தேவி பட்டினத்தில் நவகிரகங்கள் கல்தூண்கள் வடிவில் எழுந்தருளியுள்ளன.
இந்த தேவிப்பட்டணத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலுள்ள ‘உப்பூர்’ என்ற அழகிய சிறிய கடற்கரை கிராமத்தில் கோயில் கொண்டுள்ள வெயிலுகந்த விநாயகர் ஆலயமும், ராமபிரானுடன் தொடர்பு கொண்டதாகும். ராமபிரான் ராவணசம்ஹாரத்துக்கு செல்லும் முன்பு இலங்கைக்கு செல்ல சேதுக்கரையில் அணை கட்டுவதற்கு முன்பாக இந்த உப்பூர் விநாயகரை வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.கஜமுகாசுரன் என்ற அசுரனை வதைத்த பின்பே திருமால் மற்றும் தேவர்கள் ஒன்றுகூடி இந்த உப்பூரில் விநாயக மூர்த்தியை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்ததாக உப்பூர் புராணம் (லவணபுரி மகாத்மியம்) குறிப்பிடுகிறது.
முற்காலத்தில் இப்புனித தலத்தில் சூரிய பகவான் வழிபட்டு பல வரங்களை பெற்றதாகவும் பின்னர் ராமபிரான் சேது அணை கட்டுவதற்கு முன்பாக வழிபட்டதாகவும் தலபுராண செய்திகள் கூறுகின்றன. சூரியபகவான் வழிபட்டு வரங்கள் பெற்றதால் இவர் வடமொழியில் ‘ஆதவ உபேட்சா விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். (ஆதவன்-சூரியன்; உபேட்சித்தது-வழிபட்டது) இதுவே தமிழில், வெயிலுகந்த விநாயகர். காலை நேரத்தில் சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகர் திருமேனியை வழிபட்டு பூஜை செய்வதை இப்போதும் நாம் காணலாம்.
அழகிய சிறிய கோயில் கருவறையில் நான்கு திருக்கரங்களுடன் பின்னிரு திருக்கரங்களில் பாசம் அங்குசம் ஏந்தி, முன் வலக்கை அபயம், இடக்கையில் மோதகம் ஏந்தியும் இந்த விநாயகர் காட்சியளிக்கிறார். ஆலய முகப்பில் மூன்று நிலை அழகிய சிறிய கோபுரம், கருவறைமீது சிறிய விமானத்துடன் ஆலயம் திகழ்கிறது. இராமேஸ்வர தீர்த்த யாத்திரை செய்பவர்கள் ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டினம், சேதுக்கரை, திருப்புல்லாணி தலங்களைத் தரிசித்து விட்டு இங்கு வந்து விநாயகரையும் வழிபட்டுச் செல்கின்றனர். ஆனால் ராமர் வழிபட்டுச் சென்ற இந்த வெயிலுகந்த விநாயகரை முதலில் தரிசித்துவிட்டுத்தான் ராமேஸ்வர தலயாத்திரை செல்ல வேண்டும் என்றும் ஒரு ஐதீகம் நிலவுகிறது.அனுமன் இலங்கைக்கு நெருப்பூட்டி, சீதாதேவி இருக்கும் இடத்தை அடைந்து வணங்கி, அவள் ராமபிரானிடம் அடையாளமாக கொண்டு கொடுக்கச் சொன்ன சூடாமணியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் கடலைத் தாண்டி கிஷ்கிந்தைக்கு வந்து ராமபிரானை வணங்கி நற்செய்தி சொன்னார். இதைக் கேட்ட ராமர், தம்பி மற்றும் சுக்ரீவனுடன் வானர சேனைகள் சூழ கீழ் கடற்கரையோரமாக தெற்குதிசை நோக்கிச் சென்றார். அவ்வாறு சென்ற அவர், அருகிலுள்ள வன்னி மரங்கள் நிறைந்த இந்த வனத்தைக் கண்டு உள்ளே புகுந்து வெயிலில் வீற்றிருக்கும் விநாயகரை கண்டு வழிபட்டார்.
எப்படி செல்வது?
இந்த ஆலயத்திற்கு ராமநாதபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும் தேவிபட்டணம்-பட்டுக்கோட்டை சாலையில் தேவிபட்டணத்திலிருந்து 14 கி.மீ தூரத்திலும் உள்ளது.