ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 64 கைது செய்த இலங்கை கடற்படையினரின் கைது சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அறிவிக்கப்பட்ட மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்திருந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27 மீனவர்களையும், அதற்கு அடுத்த நாள் 28 மீனவர்களையும் மொத்தமாக 10 விசைப்படகுகளையும் 64 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர். இதனை கண்டிக்கும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று வரை ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வந்திருந்த முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் ராமேஸ்வரத்திலுள்ள விசைப்படகு மீனவ சங்க பிரதிநிகளுடன் டெல்லிக்கு சென்று அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் திரும்பினர்.
அதனடிப்படையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து மீனவர்கள் அறிவித்திருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.