சேலம்: அதிமுக எம்எல்ஏவாக இருந்து கொண்டு, அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் எம்எல்ஏ பதவியை, அரசியலமைப்பு சட்டத்தின்படி பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனு அளித்துள்ளார். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்து பணியாற்றினர்.
இதனிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை, எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒரு அமைப்பை தொடங்கி, பன்னீர்செல்வம் கட்சியை நடத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமித்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் தான் தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சபாநாயகரிடம் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனு கொடுத்துள்ளார். அதில், போடி தொகுதியின் எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழ்நாட்டில் இடைக்கால முதல்வராக இருந்துள்ளார். இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அதிமுக எம்எல்ஏவாக இருந்து கொண்டு, ராமநாதபுரம் தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை எதிர்த்து, சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்ட அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அதிமுக வேட்பாளரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தவுடன், அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணையின்படி, ஓ.பன்னீர்செல்வம் அவரது எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டார். ஒரு கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கட்சிக்கு எதிராகவே சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தால், அவரது பதவி பறி போகும் என அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படுகிறது. அதுவும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் எம்எல்ஏவாக இருந்து கொண்டு, அதிமுக வேட்பாளருக்கு எதிராக இவர் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் எம்எல்ஏ பதவி முடிந்து போனது.
அவர் தொடர்ந்து எம்எல்ஏவாக இருப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இது தொடர்பாக 150 பக்கம் ஆவணங்கள் சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பதவியை இழப்பார் என கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘ஒருவர் கட்சியின் உறுப்பினர் பதவியை, தானாக முன்வந்து துறந்தாலோ, சட்டமன்ற கட்சி கொறாடா உத்தரவை மீறி செயல்பட்டாலோ, அவர்களது பதவி பறிக்கப்படும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட உடனே அவரது பதவி தானாக பறி போய்விடும். இவ்வாறு அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்எல்ஏ பதவியில் இருந்து அவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது,’ என்றனர்.
* பாஜவால் போகும் பதவி
பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி தனியாக போட்டியிட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த பாஜ, எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி, தேர்தலில் போட்டியிட வைத்தது. அவர் மறுத்த நிலையில், பாஜவின் கடும் நெருக்கடி காரணமாக, சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். அதிலும் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது அவரது எம்எல்ஏ பதவியும் காலியாகலாம் என கூறப்படுகிறது.