காமபுரம் என்று சொல்லப்படும் காமாக்யா சக்திபீடத்தில், வெட்டப்பட்ட அரக்கர்களின் சிரசுகளுக்கும், உடலுக்கும் மத்தியில் ஒரு பெரும் காட்டுப்பன்றி இருந்தது. அந்த காட்டுப்பன்றி ஒரு தெய்வீக தேஜசோடு காணப்பட்டது. அந்த தெய்வீக காட்டுப் பன்றியின் மீது ‘‘பிரசண்ட பைரவர்’’ தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரை தரிசிக்க வந்த குஹ்ய காளி என்ற தேவி, அவரை பக்தியோடு வணங்கி வழிபட்டுவிட்டு, கைகுவித்து சேவித்தாள்.
‘‘எந்த ஒரு தேவியை உபாசிப்பதால், உலகில் யாராலும் வெல்ல முடியாத ஒரு பெரும் பதவியை அடைய முடியும்? உலகில் அசுத்தமாக இருக்கும் பொருட்கள் எந்த தேவியின் பெயரை கேட்ட மாத்திரத்தில் பரம புனிதமாக மாறும்? எந்த தேவியை நினைத்த மாத்திரத்தில் மனதில் இருக்கும் கவலை எல்லாம் தீரும்?’’ – என்று அடுக்கடுக்கான கேள்வியை எதிரில் இருந்த பிரசண்ட பைரவரிடம் கேட்டாள்.காளிதேவி கேட்ட இந்த கேள்வியை, மனமார பாராட்டிய பைரவர், கண்களில் கருணை பொங்க அவளை நோக்கினார்.
‘‘தேவி! உலகின் தாயான நீ.. உலகத்திற்கு நன்மை பயக்கும் கேள்வியை கேட்டு இருக்கிறாய். அற்புதம். ஆனால், இந்த கேள்விக்கான பதில், நான் உனக்கு இப்போது உரைக்கப் போகும் பதில், மிகமிக ரகசியமானது. இதை தகுதி இல்லாதவனிடம் சொல்லவே கூடாது. ஆஸ்தீகர்களால் மனதில் நித்தம் நித்தம் ஆராதிக்கப்படுவது நான் இப்போது சொல்லப்போகும் ரகசியம்’’ என்று காளியை எச்சரித்துவிட்டு, காளிதேவி கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லத் தொடங்கினார் பைரவர்.
‘‘காளி! நீ கேட்ட கேள்விகளுக்கு நான் ஒரு கதை மூலமாக பதில் சொல்கிறேன்…’’ என்று பெரும் கதை ஒன்றை சொல்லப் போவது போல குரலை கனைத்துக் கொண்டார் பைரவர். கிருதயுகத்தில், அசுரர்கள் குடியில் விடாலாசுரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். இவன் வேண்டித் தவம் கிடந்து, வரங்கள் அநேகம் பெற்று இறுமாப்புடன், மூன்று உலகங்களையும் அழிப்பவனாகவும், பயத்தில் ஆழ்த்துபவனாகவும் திகழ்ந்து வந்தான். சூலத்தையும் வேலையும் தாங்கிக் கொண்டு, இந்த அண்ட சராசரத்தையும் பயமுறுத்தி வந்தான். அவனை மும்மூர்த்தி
களாலும்கூட வெல்ல முடியவில்லை. அதற்கு காரணமும், இருக்கத்தான் செய்தது.
விடாலாசுரன் பெரும் வாராஹிதேவி உபாசகன். தவங்கள் பல புரிந்து வாராஹி தேவியின் அருள் பெற்றவனாக திகழ்ந்து வந்தான், அவன். ஆகவே, போரின் மத்தியில் அவனுக்கு ஏதாவது சங்கடம் ஏற்பட்டால், அடுத்த நொடி வாராஹி தேவியின் மந்திரத்தை ஜபம் செய்து தேவியை அழைப்பான். அவனது அழைப்பைக் கேட்டு வாராஹி தேவியும், போர்க்களத்தில் தோன்றுவாள். போர்க்களத்தில் தோன்றிய வாராஹிதேவியின் சிம்ம கர்ஜனையை கேட்டு அண்ட சராசரமே நடுங்கும். எதிரிகளும் பூண்டோடு அழிவார்கள். வெற்றி அசுரனுக்கே கிடைக்கும்.
காலம் உருண்டோடியது. திரேதாயுகம் வந்தது. ராமன் பிறந்தான். சீதையை மணந்தான். தந்தை சொல் காக்க, கானகம் சென்றான். கானகத்தில் வஞ்சகன் ராவணன், தேவி சீதையை கவர்ந்து சென்றான். ராவணனிடமிருந்து தேவி சீதையை மீட்க, சுக்ரீவன் துணையோடு, ராவணன்மீது, ராமன் போர் தொடுத்தான்.
போரில், தம்பி கும்பகர்ணனை, ராவணன் இழந்தான். புதல்வன் மேகநாதனை இழந்தான். ராமனை எதிர்த்து போர் தொடுக்கும் போது அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நின்றான். ராமன், ‘‘இன்று போய் நாளைவா’’ என்று அவனை அனுப்பினார். ராமனின் இந்த குணம் அரக்கனுக்கு மேலும் கோபத்தையே தந்தது. எப்படியாவது ராமனை வென்றே ஆவேன் என்று உறுதி பூண்டான். அப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது, அவனது நண்பனான விடாலாசுரனும் அவன் வணங்கும் வாராஹிதேவியும்தான்.
விடாலாசுரனை உதவிக்கு அழைத்தான் ராவணன். அவனுக்கு உதவும் பொருட்டு, போருக்கு வந்தான் அசுரன். போரில் வானரர்கள் அசுரனை கோரமாக தாக்கினார்கள். அசுரனால் அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. ஆகவே தனது இஷ்ட தேவதையான வாராஹிதேவியை மனதால் வணங்கினான்.அவனது பிரார்த்தனைக்கு மனம் கனிந்த வாராஹிதேவி, போர்க் களத்தில், எருமை வாகனத்தில், கையில் கபாலத்தையும், சூலத்தையும் தாங்கிக் கொண்டு, அபயவரத முத்திரையுடன், காட்சி தந்தாள். கோரமாக ஒரு உறுமலை போர்க்களத்தில் செய்தாள். அந்த உறுமல் சத்தத்தில் அண்டங்கள் நடுங்கின. ராமனையும், அனுமனையும் தவிர அனைவரையும், தனது திருவாயில் இட்டு விழுங்கிவிட்டாள், வாராஹிதேவி. ஒட்டுமொத்த வானரப்படையே தேவியின் வாய்க்குள் சென்று மறைந்துவிடவே, போர்க்களமே காலியாக இருந்தது.
நடந்த இந்த சம்பவத்தைத் கண்ட ராமன், தனது தம்பியான இலக்குவனும், தோழனான சுக்ரீவனும், அம்பிகையின் வாயில் சென்று மறைந்ததை எண்ணி வருந்தி,
சுயநினைவை இழந்து பூமியில் விழுந்தார்.ராமபிரானின் நிலையை கண்ட அனுமனின் மனம் பதறியது. செய்வதறியாது திகைத்தார். அவருக்கு அப்போது நினைவுக்கு வந்தது பெரும் வாராஹி உபாசகரான துர்வாசமுனிவர்தான். உளமார அம்முனிவரை வணங்கி, உதவி கேட்டு நின்றார் ஆஞ்சநேயர்.
சிஷ்யன் மனதால் அழைப்பதை குரு அறியாமல் இருப்பாரா? உடனேயே ஓடிவந்துவிட்டார் துர்வாச முனிவர். அவரைப் பணிந்து நேர்ந்த இன்னலுக்கு ஒரு தீர்வு சொல்லும்படி கேட்டார், அஞ்சனை புத்திரன். துர்வாசர் மெல்ல ஒரு தெய்வீக புன்னகைபுரிந்தார். வாராஹி தேவியின் மந்திரத்தை ஜெபித்து புனித நீரை ராமன் மீது தெளித்தார். ராமன் உறக்கத்தில் இருந்து விழிப்பது போல எழுந்து நின்றார். துர்வாசரை பணிந்தார் ராமன். துர்வாசர் மெல்ல சங்கடம் தீர்வதற்கான வழியைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘மகனே ராமா, விடாலாசுரன் பெரும் வாராஹிதேவி உபாசகன். அவனது பக்திக்காக கட்டுபட்டே தேவி அவனுக்கு துணையாக நிற்கிறாள். ஆனால், ஒன்றை நீ புரிந்துகொள்ள வேண்டும். வாராஹி தேவி நீதி தேவதை. நீதி எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம்தான் நிற்பாள். நீதி உன் பக்கம் இருக்கும் போது அவளால் உனக்கு எந்த தீங்கும் வராது. ஆகவே, நான் இப்போது சொல்லிக் கொடுக்கும் முறைப்படி வாராஹிதேவியை முறையாக உபாசிப்பாயாக. நிச்சயம் வாராஹி தேவி உனக்கு அருள் செய்வாள்’’ என்று ராமனுக்கு ஆசிர்வாதம் செய்த துர்வாசர், வாராஹி தேவியின் பூஜாமுறைகளை ராமபிரானுக்கு உபதேசம் செய்தார்.
துர்வாசர் சொன்ன படி ராமன் வாராஹி தேவியை பூஜித்து அவளது அருள் பெற்று விடாலாசுரனையும் ராவணனையும், ராமன் கொன்று ஒழித்தார். மனைவியை மீட்டு தர்மத்தை நிலைநாட்டினார். இப்படியாக பைரவர், ராமன் வாராஹி தேவியை உபாசித்த வரலாற்றை, காளிக்குச் சொல்லி முடித்தார். இந்த வாராஹி தேவியை உபாசிப்பதால், உலகில் யாராலும் வெல்ல
முடியாத நிலையை அடையலாம் என்றும், இந்த வாராஹி தேவியின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அனைத்தும், தூய்மை பெறும் என்றும் வாராஹி தேவியின் பெருமைகளை கூறினார் பைரவர்.
இப்படி பைரவர் வாயால் வாராஹி தேவியின் பெருமைகள், காளிக்கு சொல்லப்பட்ட வரலாற்றையும், வாராஹி தேவியை உபாசிக்கும் முறையையும், ‘‘வாராஹி தந்திரம்’’ என்னும் நூல் மிகவும் அழகாகவும், அற்புதமாகவும் விளக்கி இருக்கிறது. ராமனால் உபாசனை செய்யப்பட்ட இந்த வாராஹி மந்திரத்தை, ஜெபிக்கும் போது, முதலில் ராமனையும் அனுமனையும் வணங்கி விட்டுத்தான், வாராஹியை வணங்க வேண்டும் என்று ‘‘வாராஹி தந்திரத்தில்’’ விசேஷ கட்டளை இடுகிறார், பிரகண்ட பைரவர்.
இப்படி மும்மூர்த்திகளின் முதல் மூர்த்தியான அந்த நாராயணனுக்கே உதவிய வாராஹி தேவி, வராக தேவரின் சக்தியான அந்த அம்பிகை, நாம் அழைத்தாலும், நாம் பக்தியாக பூஜித்தாலும், வேண்டிக்கொண்டாலும், நமக்கும் அருள் செய்வாள். அவளது பாத கமலங்களை வணங்கி நமது பாத கமலங்களை போக்கிக்கொண்டு, நற்கதி அடைவோம்!
ஜி.மகேஷ்