திண்டிவனம்: பாமக உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவர பாஜ கொடுத்து வரும் நெருக்கடிக்கு பணிந்துபோவதா? அல்லது கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடந்த சில நாட்களாக எடுத்து வந்த அதிரடி நடவடிக்கையை தொடர்வதா? என்பது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நாளை (10ம் தேதி) தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தன் நியமன விவகாரத்தில் மோதல் வெடித்தது. புதுச்சேரி அருகே நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேடையிலேயே தந்தை, மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், கடந்த 29ம்தேதி அன்புமணி மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். 35 வயதிலேயே அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன் என ராமதாஸ் கண்ணீர் மல்க பகிரங்கமாக தெரிவித்தார். இதன்பின் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் தடாலடியாக நியமித்தார். இதனால் தந்தை- மகன் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து ராமதாசை சமாதானப்படுத்த பாமக முன்னணி நிர்வாகிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனிடையே மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு அணிகளில் உள்ள நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றுவதற்கான முயற்சியில் ராமதாஸ் ஈடுபட்டு வந்தார். கடந்த 5ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக்கிய முடிவுகளை ராமதாஸ் அறிவிப்பார் எனவும் தகவல் பரவின.
இந்நிலையில் அன்புமணியிடம் பாஜ மேலிடம் பேசி இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜ அணியில் பாமகவை இணைக்க ராமதாசை சந்தித்து பேசும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்தே செய்தியாளர் சந்திப்புக்கு முன்பே தைலாபுரம் தோட்டத்துக்கு தனது இளைய மகள் சஞ்சுத்ராவுடன் வந்த அன்புமணி ராமதாசை சந்தித்து, 45 நிமிடங்கள் பேசினார். அதில், உடன்பாடு ஏற்படாததால் இறுகிய முகத்துடன் வெளியேறினார். இதைதொடர்ந்து தோட்டத்துக்கு வந்த பாஜவின் தூதுவர் ஆடிட்டர் குருமூர்த்தி, ைசதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சுமார் 3 மணி நேரம் சந்தித்து பேசினர். அப்போது சிபிஐயில் அன்புமணி மீதுள்ள வழக்கு விவகாரம் பற்றி எல்லாம் சொல்லி பாஜ அணிக்கு வருவதுதான் தீர்வு என்று அவர்கள் வலியுறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை திரும்பிய ஆடிட்டர் குருமூர்த்தியை அன்புமணி ரகசியமாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பல்வேறு தரப்பில் இருந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கூட்டணிக்கு ராமதாஸ் பிடிகொடுக்காமல் தொடர்ந்து, போக்குகாட்டி வருவதால் பாஜ அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ மேலிடம் மிரட்டலால் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காகவே ராமதாஸ் நேற்று முன்தினம் திடீரென மனைவி சரஸ்வதியுடன் சென்னை புறப்பட்டு சென்றார். மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்க்க போவதாக கூறிவிட்டு சென்ற ராமதாஸ் சென்னையில் மூத்த மகள் காந்தி வீட்டில் தங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு போக்குகாட்டிவிட்டு பல கார்கள் மாறி, மாறி முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மகன் வீட்டிற்கு சென்றார். அங்கு வந்த ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரை ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது பேசிய பாஜ தூதர்கள் அன்புமணியுடனான மோதல் போக்கை கைவிட்டு சமாதானமாக போகவும், பாஜவுடன் இணக்கமாக இருக்கவும் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த ரகசிய பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாமகவில் தற்போது உள்ள பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வு எட்டப்படும். இந்த உலகத்தில் தீர்வு இன்றி எதுவும் கிடையாது. எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது நிச்சயம் உண்டு. பாமக கூட்டணியை பொறுத்தவரை 3 மாதத்தில் தெரிவிக்கப்படும் என ராமதாஸ் கூறினார். இதனால் அவர் அன்புமணியுடன் சமாதானமாக போக வாய்ப்புள்ளதாக கட்சிக்காரர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் சென்ைனயில் இரண்டு நாட்கள் முகாமிட்டிருந்தும் ராமதாசை, அன்புமணி சந்தித்து பேசாததால் மோதல் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் இதனால் இருவரும் சமாதானம் ஆகவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
முன்னதாக தைலாபுரத்தில் இருந்து சென்னை புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தைலாபுரம் திரும்பி வந்ததும் 10ம் தேதி (நாளை) அன்புமணி, குருமூர்த்தி உடனான பேச்சுவார்த்தை, பொதுக்குழு கூட்டுவது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன் என்று கூறிவிட்டுதான் சென்றார். ெசன்னை பயணத்தை முடித்துக்கொண்டு (இன்று 9ம் தேதி) மாலை அல்லது இரவு ராமதாஸ் தைலாபுரம் திரும்புகிறார். நாளை அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டு பாஜ தூதர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய ராமதாஸ் நாளை தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பார் என தெரிகிறது.
பாஜ கொடுத்த அழுத்தத்துக்கு அடிபணிந்து அன்புமணியுடன், ராமதாஸ் சமாதானமாக போவாரா? அல்லது கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை தொடர்வாரா என்பது நாளை தெரியவரும். நாளை கட்சியின் முன்னணி நிர்வாகிகளான கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, முன்னாள் பாமக தலைவர் தீரன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.