திண்டிவனம்: பாமக எம்எல்ஏக்கள் 2 பேரின் கட்சிப் பதவியை திடீரென பறித்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனிடையே தைலாபுரத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் கட்சியில் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நிர்வாகிகள் நீக்கம், ஆலோசனை கூட்டங்கள், புதிய நியமனங்கள் தொடர்கிறது. அந்த வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை மாற்றிவிட்டு 74 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 59 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார். வன்னியர் சங்கத்திலும் புதிய நியமனங்களை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவத்தை அதிரடியாக மாற்றிய ராமதாஸ் அவருக்கு பதிலாக ராஜேந்திரன் என்பவரை நியமித்துள்ளார்.
இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ சிவக்குமார் நீக்கப்பட்டு கனல்பெருமாள் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவராக கப்பை.கோபால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக வைகை சரவணன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக மணி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக ராஜி உள்ளிட்டோரையும் புதிய நிர்வாகிகளாக ராமதாஸ் நேற்று அறிவித்தார்.இதனிடையே தைலாபுரம் தோட்டத்தின் வளாக சுவரில் கடந்த ஒரு மாதமாக பாமகவினர் வாழ்த்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். குறிப்பாக அன்புமணி படத்தை போட்டு அதில் ‘‘வருங்கால தமிழகமே’’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நேற்று அந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து அகற்றப்பட்டன. தோட்டத்திற்கு வந்த பாமகவினர் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.