பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நடந்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக செயல்பட்டு வருகின்றனர். என் உயிர் மூச்சு வரை நானே தலைவர் என கூறி ராமதாஸ் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறார். கட்சியில் எனக்கு தான் முழு அதிகாரம் உள்ளது என செயல் தலைவர் பதவியை ஏற்க மறுத்து அன்புமணியும் நிர்வாகிகளை தன் பக்கம் வளைத்து வருகிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள நீயா, நானா போட்டியில் கட்சிக்கார்கள் தைலாபுரத்திற்கும், பனையூருக்குமாக அல்லாடி வருகின்றனர். தன் மீது ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தபோதும் அன்புமணி பதில் லாவணி பாடாமல் அடக்கியே வாசித்து வந்தார். ஆனால் ஒரு கட்டம் வரை பொறுத்துபார்த்த அவர் ராமதாசின் எல்லை மீறிய விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இப்ேபாது பதிலடி கொடுக்க துவங்கிவிட்டார். சென்னை பனையூரில் நேற்று முன்தினம் நடந்த சமூக ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அன்புமணி பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டார்.
‘கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் அய்யாவாக இல்லை. வயது முதிர்வின் காரணமாக குழந்தைபோல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்திக்கொள்கின்றனர். கொள்ளை அடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும், இலந்தைப்பழம் விற்பவருக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். போடுங்கள் கையெழுத்து என்றால் போடுகிறார். அவர் சிந்தனைப்படி இது நடைபெறவில்லை. ராமதாஸ் பேட்டியில் கூறுவது அத்தனையும் பொய். பெற்ற மகனையும் மருமகளையும் யாராவது நேரலையில் பேசுவார்களா?’. எனது மனைவியை திட்டினால் எனக்கு கோபம் வரும்’ என ஆவேசமாக தனது ஆதங்கத்தை நிர்வாகிகளிடம் கொட்டித் தீர்த்தார். அன்புமணியின் இந்த பேச்சு ராமதாஸ் ஆதரவாளர்களிடைய கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் தான் தைலாபுரத்தில் நேற்று சமூக ஊடக பேரவையின் ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் சமூக ஊடக பேரவை மாநில தலைவர் தொண்டி ஆனந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் மற்றும், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சிவப்பிரகாசம் உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தகூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யும்போது யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது, நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர் வினை ஆற்ற வேண்டாம். சமூக வலைதளங்களில் நளினமாகவும், நயமாகவும் பதிவிட்டு நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும். கண்ணியத்துடனும் கையாள வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்திற்கு பின் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்காரர்களை பொறுமை காக்குமாறு அவர் கூறிவிட்டார். ஆனால் வரும் வியாழக்கிழமை (ஜூலை 3ம் ேததி) ெசய்தியாளர் சந்திப்பில் அன்புமணியின் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்க போவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராமதாஸ் அமைதி காக்க சொன்னாலும் அன்புமணியின் விமர்சனத்தை அவரது ஆதரவாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ராமதாசின் தீவிர ஆதரவாளரான மாநில இணை பொதுச்செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள், அன்புமணியின் குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். இலந்தை பழம் விற்பவர்களுக்கு பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி உள்ளதாக கூறி அன்புமணி பாட்டாளி வர்க்கத்தை இழிவு படுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.