திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சமூக நீதி பேரவை கூட்டம் நடந்தது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நிர்வாகிகள் நீக்கம், நியமனம் என்று இரு தரப்பிலும் மாறி மாறி தொடர்ந்து அதிரடி அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் கட்சி கலகலத்துபோய் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே கட்சியை கைப்பற்ற இருவரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர்.
அன்புமணி டெல்லியில் முகாமிட்டு பாஜ ஆதரவுடன் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பொதுக்குழு கூட்டம் நடத்தி கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆயத்தமாகி வருகிறார். தினமும் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் ஒவ்வொரு பிரிவு நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் ராமதாஸ் இன்று சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேரவை தலைவர் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அடுத்த மாதம் பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டுக்கு சமூக நீதி பேரவை சார்பில் அதிக அளவில் தொண்டர்களை கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்றும் இன்னும் 10 மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து நிர்வாகிகளும் கட்சி பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் எனவும் பேரவை நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டார்.