சென்னை: பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் அன்புமணிக்கு ஆதரவு அளித்து நேரில் சந்தித்துள்ள நிலையில், ஆடிட்டர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையை பாமகவை கைப்பற்ற இருதரப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். தந்தையே, மகன் மீது குற்றச்சாட்டை கூறியது பாமகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தந்தை, மகன் சண்டை பேசும் பொருளாகி வருகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காலை நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மாலையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா, செய்தித் தொடர்பாளர் வக்கீல் பாலு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அன்புமணி கூட்டம் நடத்தி கொண்டு இருக்கும் போதே, மாநில பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். மேலும் மயிலம் எம்எல்ஏவின் சிவக்குமாரின் மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்தார். இதே போல இன்னும் பல மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களை அதிரடியாக நீக்கி, புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் பாணியில் ராமதாசால் நீக்கப்பட்ட மாநில பொருளாளர் திகலகபாமாவுக்கு மீண்டும் அதே பதவியை அன்புமணி வழங்கினார். மேலும் ராமதாசால் நீக்கப்பட்ட மற்றவர்களும் அதே பதவியில் நீடிப்பார்கள் என்றும் அறிவித்தார்.
தந்தை கட்சியினரை நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவிப்பதும், மகன் போட்டிக்கு நீக்கியவர்கள் அதே பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிப்பது பாமகவினர் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் பாமகவினர் திக்கு திணறி வருகின்றனர். நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘தற்போது, சில குழப்பங்கள் நீடித்து வருகிறது. அது சரியாகிவிடும், அதை சரி செய்துவிடுவேன். பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை நீக்கம் செய்து அவருக்கு மாற்றாக ஒரு அறிவிப்பு வருகிறது. அடுத்த 10 நிமிடத்தில் நான் ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன். திலகபாமா பொருளாளராக தொடர்வார் என அறிவித்துவிட்டேன். அவரை நீக்க எனக்கும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுத்த உங்களுக்கே அதிகாரம். இதுதான் கட்சியின் சட்ட விதி. இந்த விதிகள் தேர்தல் கமிஷனில் உள்ளது.
அதேபோல் மாவட்ட செயலாளர்களையும் யாராலும் மாற்ற முடியாது. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர்தான் மாற்ற முடியும். என்னுடைய கடிதம்தான் செல்லும்’ என்று கூறினார். இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் காலை, மாலை என இரு வேளைகளிலும், நாளையும் மாவட்ட செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். இன்று காலையில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்கிடையில் அன்புமணியின் பனையூர் இல்லத்தில் இன்று காலை தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேசன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் சந்தித்து பேசினர். பாமக எம்எல்ஏக்கள் அன்புமணியை சந்தித்து பேசியது ராமதாசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இதே போல அன்புமணி நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமகவில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 எம்எல்ஏக்களின் ஆதரவு அன்புமணிக்கு உள்ளது என குறிப்பிடத்தக்கது. அதே போல இன்றைய கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோருக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் அன்புமணிக்கு ஆதரவு அளித்து நேரில் சந்தித்துள்ள நிலையில், ஆடிட்டர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையை பாமகவை கைப்பற்ற இருதரப்பும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது. மேலும் பாமகவை கையகப்படுத்துவது தந்தையா, மகனா? என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.