* நிர்வாகிகள் நீக்கம், நியமிக்கும் படலம் திடீர் நிறுத்தம்
திண்டிவனம்: கூட்டணியில் சேர பாஜ அழுத்தம் கொடுத்து உள்ளதால் பாமகவில் தொடர்ந்து சலசலப்பு நீடிக்கிறது. அன்புமணியுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர், முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி உள்ளார். டெல்லி அழுத்தத்தால் அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் படலத்தை ராமதாஸ் திடீரென நிறுத்தி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முற்றியிருந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்புமணி திடீரென மகள் சஞ்சுத்ராவுடன் தைலாபுரம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மோதல் முடிவுக்கு வருமா? என கட்சியினர் எதிபார்த்திருந்த நிலையில், 45 நிமிடத்திலேயே அன்புமணி இறுகிய முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அடுத்த சில மணித்துளிகளில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். சுமார் 3 மணி நேரம் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் அங்கிருந்து இருவரும் புறப்பட்டனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என குருமூர்த்தி கூறினாலும், மரியாதை சந்திப்பு 3 மணி நேரமாகவா தொடர்ந்தது என்ற கேள்வியை பாமகவினரே எழுப்பினர். நேற்று காலை ராமதாஸ் ஓய்வில் இருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்கவில்லை என்றும் தோட்டத்தில் தகவல் வெளியாகின. ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு தொடர்பாக பாமக தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியாகாத நிலையில், சில முடிவுகளை எடுக்க முடியாமல் ராமதாஸ் திணறி வருவதாகவும், குழப்பம் நீடிப்பதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் வேலு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அப்போது, செய்தியாளர்களை மிரட்டும் பாணியில் வெளியே போ, வீடியோ எடுக்காதே என அதட்டியவாறு உள்ளே சென்றார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாமக தலைவர் பேராசிரியர் தீரன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் வந்தனர். இவர்களுடன் ராமதாஸ் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜ கூட்டணிக்கு அழைப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த முக்கிய நிர்வாகிகளை தவிர வழக்கமாக மாவட்டங்களில் இருந்து வரும் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் யாரும் நேற்று வரவில்லை.
நேற்று முன்தினம் தைலாபுரத்தில் ராமதாஸை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசிவிட்டு சென்னை திரும்பிய பின், அவரை அன்புமணி ரகசியமாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் சொல்வதை கேட்கிறேன் என்று அன்புமணி சொன்னதாக கூறப்பட்டாலும், சிபிஐ வழக்குகளுக்கு பயந்து டெல்லியுடன் இணக்கமாக செல்வவே அன்புமணி விரும்புகிறார். ஒரு பக்கம் தந்தை பாஜ கூட்டணியை எதிர்க்கும் நிலையில், இன்னொரு பக்கம் மகன் பாஜவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவது பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகளை நீக்கி, புதியவர்களை ராமதாஸ் நியமனம் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் பாஜ கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தூதுவர் மூலம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், ராமதாசின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பாஜவின் டெல்லி தலைவர்கள் அழுத்தமே காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தந்தை-மகன் சமாதானமா பாஜவுடன் கூட்டணியா? எதுவும் நடக்கலாம் என ஜி.கே.மணி மழுப்பல்
ராமதாசை சந்தித்தபின் ஜி.கே.மணி கூறும்போது, ‘அன்புமணியை சந்தித்த பிறகு ராமதாஸ் தெம்பாக உள்ளார். நல்ல செய்தியை இருவரும் சந்தித்து சொல்வார்கள். அடுத்தகட்டமாக வேகமான நகர்வாக நல்லசெய்தி வரும் என்று எதிர்பார்க்கிறேன். இரு தலைவர்களும் 45 நிமிடம் சந்தித்து பேசினார்கள். பேசுகின்ற எண்ணம் இல்லாமல் அவர் எப்படி வருவார், எப்படி சந்திப்பார். நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இருவரும் விரைவில் அதை சொல்வார்கள். ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று. கட்சிக்கு அப்பாற்பட்டு பல்வேறு ஓய்வுபெற்ற அதிகாரிகள், ராமதாசிடம் போன் செய்து பேசுகின்றார்கள். கட்சி பலமான கட்சி, விரைவில் சமாதானமாகி கட்சியை பலப்படுத்துங்கள் என்று கூறி வருகிறார்கள். அேதபோல் அவரும் வந்து சந்தித்தார் என்றார்.
பின்னர் அவரிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் வருகிறார், அதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி வந்து சந்தித்தாரா? என்று எழுப்பிய கேள்விக்கு, ‘அரசியலில் எந்தநேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார். அன்புமணி ஏன் இறுகிய முகத்துடன் வெளியே சென்றார் என்ற கேள்விக்கு, ‘ஒரு முடிவு ஏற்பட்டால் அதற்கு மொத்தமாக கருத்துக்களை வெளியிடலாம். இடையில் சந்திப்பதற்கெல்லாம் வெளியில் வந்து சொல்ல முடியாது. தற்போது நானே நீங்கள் வற்புறுத்துவதால்தான் பேசுகிறேன்’ என்றார். இருவரும் சமாதானம் ஆகி விட்டார்களா? என்று கேட்டதற்கு, ‘விரைவில் உங்களை சந்திப்பார்கள்’ என்று மழுப்பலாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
அன்புமணி குறிப்பிட்ட வாத்தியார் யார்?
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் முற்றியிருந்த நிலையில், செயல் தலைவரான அன்புமணி பனையூரில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுரை கூறியபடி உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், உங்களுக்குள்ள எல்லாம் இந்த குரூப், அந்த குரூப் என்றெல்லாம் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு நபர்தான். யாரு… அன்பழகன்தான்… (தலைமை நிலைய செயலாளர்). மாவட்ட செயலாளர் ரூ.5 லட்சம் என்று வித்தாரு, அப்புறம் ரூ.3 லட்சத்துக்கு வந்துச்சு, பின்னர் 2 லட்சம், இன்று 1 லட்சம் என இப்படியெல்லாம் பேசி காசு சம்பாதிச்சுக் கிட்டு, கட்சியையும் இந்த சாதியையும் சமுதாயத்தையும் அழிச்சிக்கிட்டு இருக்கிறாரு.. கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி. ஐயாவோட (ராமதாஸ்) கால புடிச்சிட்டு கிடக்கிறான். வாத்தியார் இன்னொருத்தர் இருக்கிறார். எல்லோரும் அவரை பயன்படுத்தி வருகின்றனர். நான் அமைதியாக இருக்கிறேன்’ என்று பேசி இருந்தார்.
இதுதொடர்பாக நேற்று ஜி.கே.மணியிடம், ‘பாமகவில் 2 துரோகிகள் உள்ளனர். ஒன்று அன்பழகன் இன்னொன்று வாத்தியார்’ என்று குறிப்பிட்டு இருந்தாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘இதை எல்லாம் சொல்லி மிகவும் பெரிதாக்காதீர்கள். உட்கட்சியில் பல பிரச்னைகள் இருக்கும். கட்சி என்பது ஒரு குடும்பம் மாதிரி, குடும்பத்தை வெளியில் பேசக்கூடாது. நான் இதை எல்லாம் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுடன் இருக்கிறேன். வெளியில் ஏதும் சொல்லக்கூடாது. நான் எதிர்பார்ப்பது, எல்லாரும் எதிர்பார்ப்பது நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. வேகமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். வேறு எதுவுமில்லை, அதை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இருவரும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது’ என்றார்.
ஏ.கே.மூர்த்தி எங்கே?
பாமகவில் துணை பொதுச்செயலாளராகவும், வடக்கு மண்டல இணை செயலாளராகவும் பதவி வகிப்பவர் ஏ.கே.மூர்த்தி. 1999ல் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு எம்பியான இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேஜ கூட்டணி அரசில் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தார். 10 ஆண்டுகள் எம்பியாக பதவி வகித்துள்ள ஏ.கே.மூர்த்தி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். பத்மினிதேவி என்ற மனைவியும், விஜய், மகேஷ், சமித்ரா என்ற குழந்தைகளும் உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாசின் இளைய மகள் கவிதாவின் மூத்த மகன் நிதர்ஷன், ஏ.கே.மூர்த்தியின் மகள் சமித்ராவை திருமணம் செய்தார். இதனால் ராமதாஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏ.கே.மூர்த்தி குடும்பமும் இடம்பெற்றது.
இதனிடையே தற்போது பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் முற்றிய நிலையில் ஏ.கே.மூர்த்தி தைலாபுரம் வருவதை அடியோடு தவிர்த்துள்ளார். அங்கு வந்தால் யாரேனும் ஒருபக்கம் நிற்க வேண்டியிருக்கும், தேவையில்லாமல் குடும்பத்தில் பிரச்னை சூழல் உருவாகலாம் என்பதாலே உள்கட்சி பிரச்னையில் தலையிடாமல் ஒதுங்குவதே நல்லது என்ற முடிவில் அவர் மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாமகவில் முக்கிய பதவியில் இருக்கும் ஏ.கே.மூர்த்தி இவ்விவகாரத்தில் தனது நிலைப்பாட்டினை தெரிவிக்காமல் இருப்பது கட்சியினரிடம் பேசுபொருளாக மாறி வருவதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமதாசுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
பாமக நிறுவனர் ராமதாசும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணியும் தைலாபுரத்தில் நேற்று சந்தித்து கொண்டனர். ஆனால், இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி அக்கட்சியினரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் நகரிலும், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, குடியாத்தம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போஸ்டரில் ‘அய்யாதான் அடையாளம்… அய்யாதான் அதிகாரம்…. அய்யாதானே எல்லாம்! சிறை சென்றவனே தலைவன்’ என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. அதன் கீழே தடா பாஸ்கர், சிறைப்பறவை, தார்வழி பன்னீர் என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.