பாமக மாநில பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் உடன் போனில் பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பாமகவை காலி செய்ய ஜி.கே.மணி சதி செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திலகபாமா போன் உரையாடல் விவரம்:
கார்த்திக்: மேடம் நான் சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் பேசுறேன்.
திலகபாமா: மாவட்டத்தை தோட்டத்துக்கு போக வேண்டாம்னு தலைவர் கூப்பிட்டு சொல்றாரு.
கார்த்திக்: மேடம் அது எனக்கு தெரியாது.
திலகபாமா: அது மட்டுமல்ல. பேஸ்புக்குல மேடத்தோட வண்டவாளங்கள் என்னவென்று நான் சொல்கிறேன். எனக்கு போன் பண்ணுங்கள் என்று ஓடுது. டேனியல் இனிமேல் ஆபீசிற்கு வரக்கூடாது. உள்ளே விட மாட்டேன்.
கார்த்திக்: டேனியல் என்ன சொல்கிறாரோ அவர் சொல்வதைதான் கேட்போம்.
திலகபாமா: கேளுங்க. பிறகு எதற்கு எங்கிட்ட கேக்குறீங்க.
கார்த்திக்: அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியாதுல்ல.
திலகபாமா: முகநூல்ல பேஸ்புக்ல பாக்கலயா நீங்க.
கார்த்திக்: நாங்க டிராவல்ல இருந்ததினால எங்களுக்கு தெரியாது மேடம்.
திலகபாமா: டேனியல தலைவர் கூப்பிட்டு தோட்டத்திற்கு போக வேண்டாம்னு சொன்னாரு. திலகபாமா விஷக்கிருமினு சொன்னவங்க கூட நின்னு நீங்க எல்லாம் போட்டோ எடுக்குறீங்க. வடிவேல் ராவணன் கூடதான நீங்க நீன்னீங்க.
கார்த்திக்: நாங்க ஒன்னும் தப்பா சொல்லலையே மேடம்.
திலகபாமா; நீங்க சொல்லல… என்னை பத்தி சொன்னவங்க கூட தானே நீங்க நிக்கிறீங்க.
கார்த்திக்: மொத்தமா நின்னோம் மேடம்.
திலகபாமா: போட்டோவுக்கு போஸ் கொடுத்தா போதும்னு நெனச்சீட்டீங்களா.
கார்த்திக்: முதல்ல நமக்கு ஐயா தான்.
திலகபாமா: ஐயாவை வச்சு எப்படி கட்சி வளப்பீங்க… தலைவர் வேண்டாமா?
கார்த்திக்: இல்ல மேடம்.. அய்யா வழிதான தலைவர். தலைவரும் வேணும்.. ஐயாவும் வேணும்.
திலகபாமா: உங்களுக்கு உள்ள நடக்கிற பாலிடிக்ஸ் தெரியாது.
கார்த்திக்: நீங்க மேல் இடத்துல இருக்கிறதுனால உங்களுக்குதான் தெரியும்.
திலகபாமா: ஜி.கே.மணி உள்ளே உட்கார்ந்து ஐயாவையும், தலைவரையும் பிரிக்க வச்சு கட்சி ஒன்னும் இல்லாம ஆக்குவதற்கு வேலை பாத்துக்கிட்டு இருக்காரு.
இவ்வாறு ஆடியோவில் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், பொருளாளர் திலகபாமா ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. இந்த ஆடியோவில் கூறப்படும் மாவட்ட செயலாளர் டேனியலை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இதுதொடர்பாக நான் எதுவும் பேச மாட்டேன். தலைமையில் சிக்கல் ஆகிடும்’ என்று கூறி தொடர்பை துண்டித்தார்.
* அன்புமணியை சந்தித்து பேச ராமதாஸ் இசைவு
ராமதாசை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த ஜி.கே.மணி கூறுகையில், ‘ராமதாஸ், அன்புமணி இடையேயான சமாதான முயற்சி விரைவில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. ராமதாஸ் தனது முடிவிலிருந்து சற்று இறங்கி வந்துள்ளதாக உணர்கிறேன். இருவரும் சந்தித்து பேசினாலே பிரச்னை முடிவுக்கு வரும். பாமகவில் இன்றைக்கு உள்ள சூழல் நீடிக்கக்கூடாது. மிகவும் மனவேதனையாக உள்ளது. கட்சியின் நலன் கருதி அன்புமணியை சந்தித்து பேசவா? என்று நானாக கேட்டேன். அதற்கு உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நான் அன்புமணியை சந்தித்து பேசலாம் என்று இருக்கிறேன்’ என்றார்.
* ‘பொறுப்பாளர்களை நீக்க வேண்டாம் என்று சொன்னேன்’
ஜி.கே.மணி கூறுகையில், ‘பொறுப்பாளர்களை எந்த பொறுப்பில் இருந்தும் மாற்றவேண்டாம் என்று ராமதாசிடம் கூறினேன். அப்படி செய்வதால் என்ன தீர்வு வரும். அவருக்கு தோன்றிய முடிவை எடுத்துவிட்டார். இதெல்லாம் சரியாக வேண்டும். பொருளாளர் திலகபாமா குறித்து எந்த குறையும் சொல்லவில்லை.
அவரை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஒரு பொறுப்பாளரை கூட மாற்ற வேண்டாம் பொறுமையாக இருங்கள் என்றுதான் சொன்னேன். இது மனசாட்சி சொல்லுது. மன உளைச்சலில் மேற்கொண்டு எதையும் செய்ய வேண்டாம், அவசரப்படாதீர்கள், சகித்து கொள்ளுங்கள் என்று தான் அய்யாவிடம் கூறிவருகிறேன்’ என்றார்.