விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியதாவது:
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் மீது மிகுந்த நல்லிணக்கத்தோடு சில கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு நான் நன்றி தெரிவித்திருக்கிறேன். சமூக நீதி கொள்கையில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உறுதியுடனும் அவர் இருந்தார். 1989ல் இருந்ததைவிட தமிழகத்தில் தற்போது சமூகநீதிக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த போராட்டக் களத்துக்கு வர வேண்டும்.
பிற்போக்கு சக்திகள் தமிழகத்தை வேட்டைக்காடாக மாற்றுவதற்கு, அவர் உடன் போய்விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். நிச்சயமாக அவர் முன் வந்தால் இந்த பகுதியில் இருக்கிற சமூக முரண்பாடுகள் தீரும், நல்லிணக்கம் ஏற்படும். அந்த மாதிரி நல்லிணக்கம் ஏற்பட்டால், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கும், கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த வேண்டுகோளை அவர் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.