திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. இதனை தொடர்ந்து வன்னியர் சங்கம், சமூக நீதிப்பேரவை கூட்டங்களில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். இதனால் கட்சியை அன்புமணியும், சங்கத்தை ராமதாசும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அன்புமணியை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்க போவதாக தகவல் பரவியது. ஆனால் இதை ராமதாஸ் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று எந்த அறிவிப்பும் இல்லாமல் தைலாபுரத்தில் பாமக முன்னாள் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் ரகசியமாக நடந்து உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. திடீரென நேற்று நடத்தப்பட்ட இக்கூட்டம், கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.