ஈரோடு: ஈரோட்டில் மே தின பேரணியில் தேன் கூடு கலைந்ததால் மாஜி அமைச்சர் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் இருந்து ஈரோடு மாவட்ட மத்திய சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் மே தின பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணிக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். மே தின பேரணி துவங்கும் முன்பு, பலத்த காற்று வீசியது. அப்போது, அப்பகுதியில் மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து அப்பகுதி முழுவதும் பறந்தது. இதனால், பேரணிக்கு வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலரும் தலையில் துண்டை போட்டு தேனீக்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொண்டனர். செங்கோட்டையன் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடி தப்பித்தார். 10 நிமிடம் வரை தேனீக்கள் சுற்றிய நிலையில், அங்கிருந்து வேறு இடத்துக்கு அவை பறந்த பின், பேரணி புறப்பட்டது. இப்பேரணியானது வஉசி பூங்கா வளாகத்தில் தொடங்கி, பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் நிறைவடைந்தது.