Sunday, February 25, 2024
Home » விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல இடங்களில் பேரணி, கடைகள் அடைப்பு

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல இடங்களில் பேரணி, கடைகள் அடைப்பு

by Ranjith

மயிலாடுதுறை: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மயிலாடுதுறையில் 5 ஆயிரம் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி வரை வணிகர்கள் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறையில் 1,000 கடைகள், சீர்காழியில் 3,000 கடைகள், கொள்ளிடத்தில் 300 கடைகள், தரங்கம்பாடியில் 100 கடைகள், செம்பனார்கோவிலில் 100 கடைகள், குத்தாலத்தில் 500 கடைகள் என மாவட்டம் முழுவதும் 5,000 கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட தேநீர் கடை, மளிகை கடைகள்,பெட்டி கடை, பூக்கடை, உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. மரக்காணத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம், சத்தியமங்கலம் சாலை, கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகை, ஓட்டல், பேக்கரி, ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகள் நேற்று காலை அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல், தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் என புஞ்சைபுளியம்பட்டி நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றபெற்ற ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மதுரை மேலமாசி விதி வளையல்காரர் தெரு, அன்னக்குழி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 300க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மாலை அடைக்கப்பட்டன. கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கோவை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் 60 சதவீதம் மூடப்பட்டிருந்தன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

* சோகத்தில் மூழ்கிய பிரேமலதா சொந்த கிராமம்
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமம். இங்குள்ள மக்கள் விஜயகாந்த் மரணம் அடைந்த செய்தி கேட்டு, கதறி அழுதனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. பிரேமலதாவின் உறவினர்கள் பலர் சென்னைக்கு குடும்பத்தோடு சென்று விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நேற்று மாலை செம்பேடு கிராமத்தில் உள்ள பிரேமலதாவின் தந்தை வீட்டில் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த விஜயகாந்த்
செம்பேடு கிராமத்தில் பிரேமலதாவின் குலதெய்வ கோயிலான முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவிற்கு விஜயகாந்த் ஆண்டுதோறும் வருவார். கடந்த 2017ம் ஆண்டு முனீஸ்வரன் கோயிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். அந்த விழா விஜயகாந்த் தலைமையில் நடந்தது. செம்பேடு கிராமத்தில் விஜயகாந்த் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்வு இது. செம்பேடு கிராமத்திற்கு வரும்போது விஜயகாந்த் அனைவரிடமும் எளிமையாக பழகுவார் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

* அதிர்ச்சியில் தேமுதிக நிர்வாகி மரணம்
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை காரைசந்து பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(49). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். விஜயகாந்தின் தீவிர ரசிகரான மோகன், தேமுதிகவின் 15வது வார்டு கிளை பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை கேட்டு வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று மதியம் தறிப்பட்டறைக்கு சென்ற மோகன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

16 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi