சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக மற்றும் கமல்ஹாசன் ஆகிய 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வாகின்றனர். மாநிலங்களவையில் ஜூலை 24ம் தேதியுடன் காலியாக உள்ள தமிழ்நாட்டிற்கான 6 உறுப்பினருக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறு உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுதவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று (10ம் தேதி) காலை 11 மணி முதல் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளருமான சுப்பிரமணியம் முன் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதேபோல அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்தது மற்றும் அவர்களின் ஆவணங்கள் சரியாக இருந்ததால் 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மனுக்களை வாபஸ் வாங்க 12ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும். அதன்படி, வருகிற 12ம் தேதி மாலை 3 மணிக்குதான் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனாலும், தற்போது 6 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாலும், கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் இனி வாபஸ் வாங்க வாய்ப்பு இல்லாததால், கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.
* அதிமுகவுக்கு எதிராக மனு தேர்தல் அதிகாரி நிராகரிப்பு
சென்னை, தலைமை செயலகத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூரியமூர்த்தி தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியத்திடம் ஒரு மனு அளித்தார். அதில், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு நடந்து வருவதால், அதிமுக வேட்பாளர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அவரின் முறையீட்டை நிராகரித்து விட்டார்.