‘‘இலை செயலாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்க காரணம் என்னவாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவில் இலை கட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு கூட்டம் நடந்தது. இதில், இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்களாம். மற்றவர்கள் கலந்து கொள்ளவில்லையாம். டெல்டாவில் இலை கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கு எதிராக இலை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்களாம். இந்த விவகாரம் தலைமை வரை சென்றுள்ளதாம். விஷயங்கள் தெரிந்தும், தலைமை கப்சிப் என இருந்து வருகிறதாம்.
கொஞ்ச நாள் பொறுமையாக இருக்கும்படி இலை கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். இதனால் இலை கட்சியின் தொண்டர்கள் புலம்பி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அவசரத்துக்கு அழைத்தால் போனை எடுக்கறதே இல்லை என புகார் வருதே.. என்னா விஷயம்..’’ என கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா. ‘‘பனியன் மாநகரில் 8 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. இது இல்லாம 2 மகளிர் போலீஸ் ஸ்டேஷனும் இருக்குது.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக பிரத்யேகமான செல்போன் எண்கள் போலீஸ் வெளியிட்டாங்க. ஆனா சமீபகாலமாக பொதுமக்கள் அந்த செல்போன் நம்பர்களுக்கு தொடர்பு கொண்டால் எந்த ரெஸ்பான்ஸ்சும் இருக்கிறது இல்லையாம். ஒரு சில ஸ்டேஷன் நம்பர்கள் எல்லா நாளும் சுவிட்ச் ஆப்னு தான் பதில் வருதாம். சமீபத்தில மூன்று எழுத்து இனிசியல் கொண்ட மகளிர் ஸ்டேஷனுக்கு குடும்ப பிரச்னை தொடர்பாக பெண் ஒருவர் நைட் நேரத்துல போன் செய்திருக்காங்க.
மறு முனையில் பேசிய பெண் போலீஸ் ஒருவர் டூட்டி முடிந்து நான் வீட்டிற்கு வந்துட்டேன். ஸ்டேசன் லேண்ட்லைனுக்கு போன் செய்து புகார் சொல்லுன்னு கூறி கட் பண்ணிட்டாங்களாம். ஸ்டேஷன் லேண்ட்லைனுக்கு பல முறை தொடர்பு கொண்டும் கடைசி வரை போன் எடுக்கவே இல்லையாம். வேற வழி தெரியாம அடுத்த நாள் காலையில பாதிக்கப்பட்ட பெண் நேர்ல போய் ஸ்டேஷன்ல முறையிட்டு இருக்காங்க. விடிய விடிய வேலை செய்ய நீயாம்மா சம்பளம் தர்றேனு புகார் கொடுக்க வந்த பெண்ணை திட்டி தீர்த்தார்களாம்.
அவசரத்திற்கு அழைக்கவும் என்று கூறிவிட்டு ஆத்திரத்துல திட்டுவது நியாயமான்னு பனியன் நகர் மக்கள் கேள்வி எழுப்பி இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோயம்பேடு கட்சி பொதுக்கூட்டத்தில் இலை கட்சியையும், தலைவர்களையும் மாஜி எம்எல்ஏ புகழ்ந்துபேசி சீட்டுக்கு துண்டு போட்டிருக்கிறாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் கோயம்பேடு கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்களாம்.
‘திருக்கோயில்’ ஊரில் ஏற்கனவே பொதுக்கூட்டத்தை ரெடி பண்ண அக்கட்சியில் ஏழுமலையான் பெயரை கொண்ட மாஜி எம்எல்ஏவோ, மாவட்ட தலைநகர் தொகுதியைதான் குறிவைத்திருக்கிறோம், இலைகட்சி கூட்டணியில் போட்டியிட எல்லா வேலையும் நடக்கிறதுன்னு சொல்லி இங்கு மாற்றி கூட்டத்தை நடத்தி முடித்தார்களாம். இக்கூட்டத்தில் பேசிய மாஜி எம்எல்ஏவோ, இலை கட்சியையும், தலைவர்களையும் புகழ்ந்துபேசி எம்எல்ஏ சீட்டுக்கு துண்டு போட்டிருக்கிறாராம்.
அவர் பேசுகையில், எல்லா கட்சிகளும் வியூக வகுப்பாளர்களை வைத்துதான் அரசியல் செய்கிறார்கள். அதில் நாம்மட்டும் தான் விதிவிலக்கு. இலை கட்சியில எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில எடப்பாடியும் அப்படி செய்யவில்லைன்னு அவர்களை புகழ்ந்து பேசிய மாஜி எம்எல்ஏ கடைசியில் இந்தபகுதி இலை கட்சி மாஜி அமைச்சருக்கும் வக்காலத்து வாங்கி தூக்கி பேசியிருக்கிறாராம். மாஜி அமைச்சர் ெசாந்த ஊர்பக்கம் செல்வதால் இந்த தொகுதியை எப்படியாவது கூட்டணியில் பெறும் முயற்சியில் கோயம்பேடு கட்சி மாஜி எம்எல்ஏ தேர்தல் பணியை தொடங்கியிருக்கிறாராம்.
அதற்காக நம்ம கட்சி கூட்டத்தில் இலைக் கட்சியையும், அவங்க தலைவர்களை இப்படியா புகழ்ந்து தள்ளுவது என்று கூட்டத்திற்கு வந்தவர்கள் புலம்பி சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ராஜ்யசபா சீட்டு நெருக்கடியில இலைக் கட்சி இருக்குற தகவலை சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் ராஜ்யசபா எம்பிக்கான 2 சீட்டில் ஒன்று முரசுக்கு போய் விட மீதம் ஒரு சீட் இருக்கிறது. கடந்த முறை குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டுகளைப் பெறும் நோக்கில் தென்மாவட்டத்தின் தர்மமானவருக்கு கொடுத்ததில், அவர் தேனிக்காரரின் ஆதரவாளராகிப் போனார்.
இம்முறை இதற்கு மாற்றாக மற்றொரு சமுதாயத்தை குறிவைத்து இதே தென்மாவட்டத்தில் சீட்டுக் கொடுக்க இலைக்கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறதாம். இங்கு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு சேலத்துக்காரருக்கு எப்போதுமே இல்லாத சூழலில், மற்றொரு சமுதாயத்து ஆதரவைப் பெற முடிவானது. ஆனாலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் பலனால், ஆளும் கட்சிக்கான ஆதரவு நிலைப்பாட்டிலேயே இரு சமூகத்தினரும் இருந்து வருவதும், இந்த மற்றொரு சமுதாயத்தவருக்கான நூற்றாண்டு விழா, மணிமண்டப அறிவிப்புகளும் ஆளுங்கட்சி மீதான ஆதரவை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இங்கு இரு சமூகத்தவரும் இணைந்த ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கும்போது, ஓட்டுகளை மட்டுமே குறிவைத்து இலைக்கட்சி காய் நகர்த்துவதாக கட்சியினர் பலரிடமும் தலைமை மீதான கசப்பிருக்கிறது. இதற்கிடையில், தூங்கா நகரத்து செல்லமானவரின் பிள்ளை உள்ளிட்ட முக்கிய பலரும் இந்த சீட்டைக் கேட்டு வருவதும் தலைமைக்கு நெருக்கடி தந்திருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.