சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வரவேற்கும் விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மநீம கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனை கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், புதுச்சேரி மநீம நிர்வாகிகள், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர், பெண்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக, கபடி போட்டிகளில் தொடர் சாதனை படைத்து வரும் சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த வீராங்கனைகளுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில், 5 லட்சம் மதிப்பிலான கபடி ரப்பர் மேட் ஆடுகளம் வழங்கப்பட்டது. மேலும், கட்சியின் மகளிர் அணி சார்பில், பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவி கமல்ஹாசனின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 1000 துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.