சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்கும்.
தற்போது, திமுகவில் அப்துல்லா, வில்சன், சண்முகம், வைகோ (மதிமுக) ஆகியோரும், அதிமுக சார்பில் சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி பதவிக்காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் மே 2ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வரை வாபஸ் வாங்கலாம். மே 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்குமாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களை சந்தித்து பேசியதாவது:
அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில் பரிசீலித்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வ வேட்பாளராக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவருமான தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுக தலைமையிலான தேமுதிக கூட்டணி தொடரும். 2026ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின் போது தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்கப்படும்.
தேமுதிக ஏற்றுக்கொண்ட பிறகுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, கடந்த 28ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அதிமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜூன் 4ல் எம்எல்ஏக்கள் கூட்டம்
மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளதால் திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 9ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். இந்நிலையில், வரும் 4ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமையகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.
அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
* இன்பதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். ராதாபுரம் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை வெறும் 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்பாவுவிடம் 5,925 ஓட்டுகள் வித்தியாசத்தில் இன்பதுரை தோற்றார்.
இன்பதுரை அடிப்படையில் வழக்கறிஞர். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் அணியின் செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார். அதிமுக விவகாரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை வாதாடி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிமுக பொதுக்குழு பிரச்னை, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட வழக்குகளில் இன்பதுரை வாதாடி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதற்கு பரிசாக தான் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* தனபால்: திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏவான தனபால், முனைவர் பட்டம் பெற்றவர். அதிமுகவில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் இவர் தற்போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவர் பதவியில் உள்ளார். மேலும், இவரது மனைவி காயத்ரி திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.