சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 3 பேர் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேர் இன்று காலை 11 மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனு தாக்கலின் போது கூட்டணி கட்சி தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதேபோல அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பதுரை, தனபால் ஆகியோர் வருகிற 6ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
தொடர்ந்து 10ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 12ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் பணம் கட்ட வேண்டும். ஆனால், இவர்களுக்கு எந்த எம்எல்ஏக்களும் முன்மொழியவில்லை. இதனால் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். திமுக சார்பில் போட்டியிடும் 4 பேரும், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.