சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் சொத்து விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக, அதிமுக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களிடம் எவ்வளவு சொத்து உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில், பி.வில்சன் கையிருப்பில் ரூ.15 லட்சம், அவரது மனைவி வான்மதியிடம் ரூ.1.40 லட்சம், பென்ஸ், டோயோட்டோ, மகேந்திரா கார்கள், அசையும் சொத்து மதிப்பு ரூ.12.58 கோடி, மனைவியிடம் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.3.27 கோடி விவசாய நிலம் உட்பட அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.28.08 கோடி, மனைவி பெயரிலான சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.11.72 கோடி இருவருக்கும் சேர்த்து ரூ.1.15 கோடி கடன் உள்ளது.
கவிஞர் சல்மா கையிருப்பில் ரூ.1 லட்சம், கணவர் அப்துல் மாலிக்கிடம் ரூ.50 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.90.09 லட்சம், கணவர் பெயரிலான சொத்தின் மதிப்பு ரூ.55.42 லட்சம், வேளாண் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1.15 கோடி, வேறு அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1.95 கோடி உள்ளது. எஸ்.ஆர்.சிவலிங்கம் கையிருப்பு ரூ.50 ஆயிரம், மனைவி நவரத்தினத்திடம் ரூ.50 ஆயிரம், அசையும் சொத்து மதிப்பு ரூ.76.04 லட்சம், மனைவி பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1.30 கோடி, நிலங்கள் உட்பட அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.58.61 லட்சம், மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடி, கடன் ரூ.64.30 லட்சம், 3 குற்ற வழக்குகள் நிலுவை உள்ளது.
மநீக தலைவர் கமல்ஹாசன் 2023-24ம் நிதியாண்டின் வருவாய் ரூ.78.90 கோடி, அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி, ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி, கடன்களாக ரூ.49.67 கோடி, கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம், மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்களின் மதிப்பு ரூ.8.43 கோடி படிப்பு, சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சிடி முத்தையா செட்டியார் பள்ளியில் 8ம் வகுப்பு ஆகும். அதைப்போன்று அதிமுக சேர்ந்த இன்பதுரை கையிருப்பில் ரூ.1.25 லட்சம், மனைவி பிரிசில்லா செல்வமாதா ரூ.50 ஆயிரம், அசையும் சொத்து மதிப்பு ரூ.64.49 லட்சம், மனைவி பெயரிலான அசையும் சொத்து மதிப்பு ரூ.1.44 கோடி, அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.2.54 கோடி, கடன் ரூ.1.31 கோடி உள்ளது.
தனபால் கையிருப்பு ரூ.1.25 லட்சம், மனைவி காயத்ரியிடம் ரூ.1.50 லட்சம், அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5.09 கோடி, அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.3.46 கோடி, மனைவி பெயரிலான அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.12.88 கோடி, கடன் ரூ.50 லட்சம், 2 குற்ற வழக்குகள் நிலுவை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.