* 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்
* அதிமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. வேட்பு மனு தாக்கலின்போது அதிமுக கூட்டணி கட்சியினர் புறக்கணிப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அன்புமணி (பாமக), சந்திரசேகர் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை எம்பியாக உள்ள வில்சன் மற்றும் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படுகிறது என்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 28ம் தேதி அறிவித்தார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1ம் தேதி அறிவித்தார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 2ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் வருகிற 9ம் தேதி (திங்கள்) வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கமல்ஹாசன் ஆகிய 4 பேர் நேற்று பிற்பகல் 12.05 மணியளவில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டமன்ற கூடுதல் செயலாளருமான சுப்பிரமணியத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், மமக தலைவர் ஜவாஹிருல்லா,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். குறிப்பாக, ஒவ்வொரு திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்யும்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் வேட்பாளருடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு 3 வேட்பாளர்களும் சென்று வாழ்த்து பெற்றனர். பின்னர் கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். அதேபோல, நேற்று பிற்பகல் 1 மணியளவில் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சு.ரவி, முன்னாள் எம்எல்ஏ ம.தனபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதேநேரம், அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ள பாஜ, தேமுதிக கட்சி நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். வேட்புமனு செய்ய வருகிற 9ம் தேதி கடைசி நாள். 10ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 12ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாளாகும். ஒரு எம்பி வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கும் தலா 10 எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர்.
அதேநேரம் சுயேச்சையாக போட்டியிடும் பத்மராஜன் மற்றும் கண்டே சயன்னா, அக்னி ஆழ்வார் ஆகிய 3 பேருக்கு 1 எம்எல்ஏ கூட முன்மொழியவில்லை. அதனால் இந்த 3 பேரின் மனுக்களும் வருகிற 10ம் தேதி வேட்புமனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டு விடும். மேலும், 12ம் தேதி மாலை 3 மணி வரை வாபஸ் வாங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதனால் 12ம் தேதி மாலை திமுக, அதிமுக மற்றும் கமல்ஹாசன் ஆகிய 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.
டிஜிட்டல் உலகில் இன்னும் சில்லரை
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அக்னி ஆழ்வார் சுயேச்சை வேட்பாளராக நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 மற்றும் 10 ரூபாய் நாணயமாக ரூ.10 ஆயிரத்தை டெபாசிட்டாக வழங்கினார். எதற்காக சில்லரையுடன் வந்தீர்கள் என்று கேட்டபோது, ‘‘டிஜிட்டல் இந்தியா என்று ஒன்றிய அரசு கூறுகிறது. தற்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஜி பே, போன் பே என எளிதில் செய்யப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மட்டும் இன்னும் டெபாசிட் தொகையை பணமாக வாங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ரூ.10 ஆயிரம் தொகையை சில்லரையாக கொடுத்துள்ளேன்” என்றார்.