சென்னை: எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக-வுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக-வுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்நிலையில், 6 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை தேர்தலில் 4 இடங்களுக்கு திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவித்துள்ளது. எஞ்சிய 2 இடங்கள் அதிமுகவுக்கு கிடைக்கும் நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அதிமுக கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து நாளை நடக்கும் கூட்டத்தில் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.