கிங்டாவோ: சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் இந்தியா சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘சில நாடுகள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கொள்கையாக கொண்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன.
இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை. அத்தகைய நாடுகளை விமர்சிக்க எஸ்சிஓ தயங்கக் கூடாது’’ என்றார். மாநாட்டின் நிறைவாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் கண்டிக்கப்படவில்லை. எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கவில்லை. இதனால் அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார். இந்தியாவின் இந்த மறுப்பால் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கூட்டறிக்கை இன்றி நிறைவடைந்தது.