Tuesday, March 25, 2025
Home » சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடங்கி வைப்பு

சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடங்கி வைப்பு

by Suresh

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் இன்று (15.02.2025), சென்னை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் (AGOT) நிதியின்கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில், கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி (Radio Frequency Ablation Machine) சேவையினை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

பின்பு, அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடக்கம்;  சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.42 இலட்சம் செலவிலான புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சிகிச்சைக்காக கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய் மற்றும் மூட்டு வலியால் வரும் கடுமையான வலிகளுக்கு உரிய நிவாரண சிகிச்சைகள் 2013 ஆம் ஆண்டு முதல் சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் செய்யப்பட்டு வருகிறது. நாள்பட்ட வலி என்பது 3 மாதத்திற்கு தொடர்ச்சியாக நிலையாக ஒரே இடத்தில் இருக்கும் வலி. மேலும் கை, கால்களில் ஏற்படும் வலி, எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வாத நோய், புற்றுநோயால் ஏற்படும் பலவித வலி நோய்களால் அன்றாட வாழ்க்கை முறையில் சோம்பலை ஏற்படுத்தும்.

தூக்கமின்மையை உண்டாக்கும். தற்கொலை போன்ற உணர்வுகளுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கும். எனவே மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் உடம்பில் எந்தவித பாகத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும். ஃப்ளோரோஸ்கோபி என்று சொல்லப்படும் மிக நேரம் எக்ஸ்ரே மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த செயல்முறைகளின் மூலம் தினப் பராமரிப்பு நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். மாதத்திற்கு சுமார் 50 முதல் 60 நோயாளிகள் வரை இந்த சிகிச்சைகள் மூலம் பயனடைய முடியும். இந்த சிகிச்சையானது பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் பெற வேண்டும் என்று சொன்னால், ஒரு நோயாளிக்கு சுமார் ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை செலவாகும். ஆனால் இந்தக் கருவிகள் மூலம் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கத்துறையில் நாள்பட்ட வலி நிவாரண மையத்தின் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே இத்தகைய சிறப்புக்குரிய இக்கருவி அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் (AGOT) நிதியின்கீழ் ரூ.42 இலட்சம் செலவில் மாண்பமை நீதியரசர்கள் இம்மருத்துவமனைக்கு தந்து பெரிய அளவில் பயன்பெற உதவியிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து, சம்மந்தபட்ட அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழுநோய் பரிசோதனை தொடர்பான கேள்விக்கு;
தொழுநோய் பொறுத்தவரை விழிப்புணர்வு முகாம் 30.01.2025 முதல் 15.02.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெறுகிறது. தொழுநோய் பரிசோதனைகள் 13.02.2025 அன்று மட்டும் 133 வட்டாரங்களிலும், 27 நகரப்பகுதிகளிலும் 3,42,241 வீடுகளில் 10,67,675 பேர் பயன்பெறும் வகையில் பரிசோதனைகள் நடைபெற்றது. தொழுநோய் பரிசோதனைகளுக்கான அறிகுறிகள் இருப்பவர்களிடம் குறிப்பாக தோலில் உணர்ச்சியற்ற, சிவந்த வெளிர்ந்த தேமல், கண்களை மூட இயலாமை, கை விரல்கள் மடக்கி இருத்தல், கை மற்றும் கால்களில் ஆறாத புண்கள் போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடாக தேடிச் சென்று பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகள் தொடர்பான கேள்விக்கு;
நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்து 3 ஆண்டுகளுக்கு முன்னாள் வரை வட்டார மருத்துவமனை, வட்டம் சாரா மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தான் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசுப் பொறுப்பேற்றபிறகு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் குறிப்பாக 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ASV என்று சொல்லக்கூடிய பாம்புக்கடி மருந்துகளும், ARV என்று சொல்லக்கூடிய நாய்க்கடி மருந்துகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, நான் தினந்தோரும் ஆய்வு மேற்கொள்கிற அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ச்சியாகவே கண்காணித்து வருகிறேன். அந்த வகையில்தான் சென்னை. பெரியார்நகர் அரசு மருத்துவமனை இன்றைக்கு 500 புதிய படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருகின்ற 28.02.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அந்த மருத்துவமனை 1986ல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத்தான் கட்டப்பட்டது. இந்த அரசு பொருப்பேற்றதற்கு பிறகு கூடுதலாக இன்னும் 200 படுக்கைகள் சேர்த்து 300 படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. மிக விரைவில் வட சென்னையில் 800 படுக்கைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மருத்துவ கட்டமைப்பை அந்த மருத்துவமனை பெறவிருக்கிறது. எனவே அதில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து ஒட்டுமொத்தமாக இருப்பு என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது, அந்த வகையில் அங்கேயும் இருக்கிறது.

சென்னை, இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையைப் பொருத்தவரை 2021 மே 7-க்கு முன்னாள் தினந்தோருமான புறநோயாளிகளின் எண்ணிக்கை 8,000 ஆக இருந்தது. அது இன்றைக்கு 19,000 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் தற்போது அரசு மருத்துவ சேவையை பொது மக்கள் அதிக அளவு பயன்படுத்த விரும்புகின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் லிங்கேஸ்ரவன் , மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. தேரணிராஜன், மயக்கவியல் துறை இயக்குநர் மரு. சந்திரசேகரன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

fourteen + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi