வேளச்சேரி: கேரளாவை சேர்ந்தவர் அப்சல் (25). இவர், மடிப்பாக்கத்தில் தங்கி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை, செம்மஞ்சேரில் இருந்து 2 பயணிகளை ஏற்றிக் கொண்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விடுவதற்காக ராஜிவ்காந்தி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
தரமணி பாலிடெக்னிக் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் மற்றும் 2 பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அருகில் இருந்த போக்குவரத்து போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை அப்புறப்படுத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
* சிசிடிவி கம்பம் மீது கார் மோதி விபத்து
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ஞானவடிவேல் (45). டாக்சி டிரைவரான இவர், நேற்று அதிகாலை திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எல்பி சாலையில் அடையாறு சிக்னல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிசிடிவி கேமரா கம்பத்தின் மீது மோதியது. இதில் கேமரா கம்பம் உடைந்து கீழே விழுந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.