டெல்லி: அப்பா இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் என ராஜிவ் காந்தி நினைவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு நடந்து சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மகாராஷ்டிர தலைநகா் மும்பையிலும் இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவைத் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். அப்போது மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்தும் தலைவா்கள் விவாதிப்பாா்கள் என்று தெரிகிறது. இதன் காரணமாக ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா மகாராஷ்டிரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவு கூர்ந்த ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது;
இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்…
அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம், உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.