Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1985ம் ஆண்டு ரஜினிகாந்த் துவக்கி வைத்த பிருந்தா தியேட்டர் ஓட்டத்தை நிறுத்தியது: 40 ஆண்டு குதூகலித்த ரசிகர்கள் தவிப்பு

பெரம்பூர்: செல்போன் மற்றும் ஓடிடி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தியேட்டர்களுக்கு மக்கள் படம் பார்க்க வருவது கடந்த பல வருடங்களாக படிப்படியாக குறைந்துவிட்டது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் அடையாளமாக திகழ்ந்துவந்த திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகிறது. தலைநகர் சென்னையில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த தியேட்டர்கள் கூட தங்களது ஓட்டத்தை நிறுத்திவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் வணிக பயன்பாட்டு கட்டிடங்களாகவும் உருமாறி வருகிறது.

ஏற்கனவே சென்னையில் பிரபலமாக திகழ்ந்த அகஸ்தியா, காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, கிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, சபையர், ஆனந்த், காசி தியேட்டர் ஆகியவை இடிக்கப்பட்டுவிட்டன. சில தியேட்டர்கள் முத்திரையை இழந்து பாழடைந்த கட்டிடங்களாக மாறிவிட்டன.

இந்த நிலையில், வடசென்னையின் அடையாளமாக திகழ்ந்துவந்த பெரம்பூர் பிருந்தா திரையரங்கம் நேற்றுடன் தனது பங்களிப்பை முடித்துக்கொண்டது. கடந்த 1985ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிருந்தா தியேட்டரை துவக்கிவைத்தார். அப்போது லோகநாதன் செட்டியார் என்பவர் அதன் உரிமையாளராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது வழித்தோன்றல்களான விஸ்வநாதன், சந்திரசேகர் ஆகியோர் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் பிருந்தா திரையரங்கம் நேற்றுடன் தனது கடைசி பட காட்சியை நடத்தி முடித்து இன்று முதல் பட காட்சிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. இனிமேல் இந்த திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. தனியார் கட்டுமான நிறுவனம் இந்த இடத்தை வாங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1985ம் ஆண்டு இந்த தியேட்டரில் உதய கீதம், நான் சிகப்பு மனிதன் ஆகிய 2 படங்கள் வெளியாகின. வடசென்னையில் முதல் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டர் என்ற பெருமையை பெற்றது. சுமார் 15 கிரவுண்ட் பரப்பளவு கொண்டது. 1170 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். வட சென்னையில் மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையும் பெற்றது. ரஜினி படம் எதுவாக இருந்தாலும் முதல் ஷோ கண்டிப்பாக இந்த தியேட்டரில் களைகட்டும். அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்கள் விரும்பி படம் பார்க்கும் தியேட்டர்களில் பிருந்தா திரையரங்கமும் ஒன்று. இங்கு பாட்ஷா, மாப்பிள்ளை, படையப்பா உள்ளிட்ட பல படங்கள் அதிக நாட்கள் ஓடிய சாதனை படைத்துள்ளன. கடந்த 40 வருடங்களாக  இந்த தியேட்டர் பொதுமக்களின் மகிழ்ச்சியின் அடையாளமாக திகழ்ந்தது. நேற்று கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டு காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டது.

இதுகுறித்து 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவந்த மேனேஜர் பன்னீர்செல்வம் கூறுகையில், ‘’எங்களது தியேட்டருக்கு பிருந்தா தியேட்டர் என்று பெயர் இருந்தாலும் ரஜினி தியேட்டர் என்று தான் கூறுவார்கள். இந்த திரையரங்கத்தை ரஜினி ஆரம்பித்து வைத்தார். ரஜினியின் அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்கு நிறைவான பங்களிப்பை அழைத்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி’ என்றார்.