ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான ரூ.3 கோடி மோசடி வழக்கு விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கடந்த 2021ல் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2ல் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றமான நடுவர் எண் 2ல் இருந்து, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் விருதுநகர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.