ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏவை ‘பாகிஸ்தானி’ என்று அழைத்த பாஜக எம்எல்ஏவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் சபாநாயகர் அவரை கண்டித்தார். ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் நடந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ கோபால் சர்மா பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரபீக் கானை ‘பாகிஸ்தானி’ என்று கூறினார். இவரது பேச்சுக்கு சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகையில், ‘நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்த மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடந்தது. முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பாஜக அரசில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாஜக எம்எல்ஏ கோபால் சர்மா எழுந்து நின்று பேசும்போது, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரபீக் கானை பார்த்து ‘பாகிஸ்தானி-பாகிஸ்தானி’ என்று சொல்லத் தொடங்கினார். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சபாநாயகர் சந்தீப் சர்மா தலையிட்டு எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தினார். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்தும் பாஜக எம்எல்ஏ விமர்சனம் செய்தார். இதனை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்த்தபோது, சபையில் உறுப்பினராக இல்லாத யாரையும் பெயரிட முடியாது என்று சபாநாயகர் ஆட்சேபனை தெரிவித்ததால், பாஜக எம்எல்ஏ மன்னிப்பு கேட்டார். அதேபோல் மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்கும் பாஜக எம்எல்ஏ கோபால் சர்மா மன்னிப்பு கேட்டார். இருந்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.