ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ராஜஸ்தானில் கடைசிகட்ட தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இறங்குவதால், தேர்தல் களம் பரபரப்படைந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
200 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க-வும், தனது ஏழு முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு;
* ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்துள்ளபடி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
* ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* உள்ளாட்சி மன்ற அளவில் பணி நியமனத்துக்கு புதிய முறை கொண்டு வரப்படும்.
* ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிராஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
* கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
* அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி திட்டம் அமல்படுத்தப்படும்.
* ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்.
* ராஜஸ்தானில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும்.
* ராஜஸ்தானில் மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.