ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், பில்வாரா, கேக்ரி மற்றும் ஆஜ்மீர் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனால் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டம், கோலை மக்ரா என்ற இடத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 195 மிமீ மழை பதிவாகியது.இதை தொடர்ந்து ஆஜ்மீரில் உள்ள மசுதாவில் 180 மிமீ,பேவார் மாவட்டம், நயாநகரில் 170 மிமீ-ம் மழை பதிவாகியுள்ளது.ராஜஸ்தானில் கடந்த 2 மாதங்களில் வழக்கத்துக்கும் அதிமாக மழை பெய்துள்ளது. பொதுவாக இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 232.3 மிமீ மழை பெய்யும். ஆனால் தற்போது 280.6 மிமீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தலைநகர் ராஞ்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொகாரோ மாவட்டத்தில் கனமழையால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.தன்பாத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொல்கத்தாவில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. கொல்கத்தா விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. எனினும் விமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இமாச்சல் பிரதேசத்தில் மேகவெடிப்பால் மாயமான ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட வீரர்கள் தேடி வருகின்றனர்.