ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சிக்காக வெளிமாநில மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அங்குள்ள பயிற்சி மையம் ஒன்றில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற தேர்வை எழுதிய மாணவர் அவிஷ்கர், பிற்பகல் 3:15 மணியளவில் மையத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சிலமணி நேரங்களிலேயே பீகாரை சேர்ந்த ஆதிர்ஸ்ராஜ் என்ற மாணவரும் தேர்வு எழுதிய பிறகு தனது வாடகை குடியிருப்புக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் கோட்டா மாவட்டத்தின் பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் நீட் தேர்வு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களில் 15 பேர் கடந்தாண்டு தற்கொலை செய்த நிலையில், நடப்பாண்டு 24 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனால் கோட்டா நகரில் சில காலம் வரை எந்த தேர்வுகளையும் நடத்த வேண்டாம் என்று நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.