ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் மற்ற எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவை வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். ராஜஸ்தானில் அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடந்த விவாதத்தின்போது அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் பாகர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவரை அவை காவலர்கள் வெளியேற்ற முயன்றபோது சக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேறாமல் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கமிட்டார்.
இதன் காரணமாக எம்எல்ஏ முகேஷ் பாகரை 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் வசுதேவ் தேவ்னானி உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த முடிவை கண்டித்து அவையின் மையப்பகுதிக்குள் வந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ரமிலா காதியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.