ராஜஸ்தானில் 1993ம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அந்த அளவுக்கு ராஜஸ்தான் வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜவை மாற்றி மாற்றி தேர்வு செய்து வந்து இருக்கிறார்கள். இந்த முறை நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக 200 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கிறது ராஜஸ்தான். தற்போது ராஜஸ்தானில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி. 30 ஆண்டு வரலாற்றை மாற்றி எழுதுமா காங்கிரஸ், தொடர்ந்து 2வது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா இல்லை பா.ஜ வசம் ஆட்சி அதிகாரம் செல்லுமா என்பது தான் இன்றைய கேள்வி. ராஜஸ்தான் மிக பழமையான மாநிலம். பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று. குஜராத், மபி, உபி, டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களால் சூழப்பெற்ற மாநிலம் ராஜஸ்தான். தார் பாலைவனமும் இங்கு தான் இருக்கிறது. ஜோத்பூர், உதய்பூர், அமீர், ஜெய்சால்மர், சித்தோர்கார் கோட்டைகளும் இங்கு தான் இருக்கிறது. உலகின் பழமையான ஆரவல்லி மலைத்தொடர் கூட இங்கு உள்ளது. இதன் மீது தான் அபு சிகரம் உள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த ராஜஸ்தானில் காங்கிரசும், பா.ஜவும் தான் முக்கிய கட்சிகள் என்றாலும், 2018ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் சுயேட்சகைள் 13 பேர், பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் 6 பேர், ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி சார்பில் 3 பேர், பாரதிய பழங்குடி கட்சி, மார்க்சிஸ்ட் சார்பில் தலா 2 பேர், ராஷ்ட்ரீய லோக் தளம் சார்பில் ஒருவர் என்று வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.
2018 தேர்தலில் 74.72 சதவீத வாக்குகள் பதிவானது. 2013ம் ஆண்டு தேர்தலை விட ஒரு சதவீதம் வாக்குப்பதிவு குறைவு. அப்போது 4.77 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் 3.57 கோடி வாக்குகள் தான் பதிவானது. காங்கிரஸ் கட்சிக்கு 1.39 கோடியும், பா.ஜவுக்கு 1.37கோடி வாக்குகளும் பதிவானது. வெறும் 2.25 லட்சம் ஓட்டுகளில் ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுத்தது பா.ஜ. இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை 36 மாவட்டங்கள். இந்த முறை 53ஆக உயர்த்தி விட்டார் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட். ஏராளமான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார். அதனால் நம்பிக்கையில் இருக்கிறார். காங்கிரசில் இருந்த குழப்பமும் நீங்கி விட்டது. அங்கு முதல்வர் அசோக் கெலாட்டுக்கு குடைச்சல் கொடுத்து வந்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது மேலிட சமரச திட்டத்தை ஏற்று கெலாட்டுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு அனைத்தும் சாதகமாக உள்ளது.
ஆனால் பா.ஜவில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. மீண்டும் முதல்வர் பதவிக்கு வசுந்தரா ராஜே நிறுத்தப்படுவாரா என்பது தெரியவில்லை. அவரது ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் வழங்கவில்லை. மேலும் இந்த தேர்தலில் வசுந்தரா முன்னிலைப்படுத்தப்படவும் இல்லை.போதாக்குறைக்கு பா.ஜ வெளியிட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 7 எம்பிக்கள் வேறு இடம் பெற்றுள்ளனர். இதில் ராஜ்சமண்ட் எம்பி தியாகுமாரி, முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஜெய்ப்பூர் புறநகர் எம்பியுமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் நிறுத்தப்பட்டு இருப்பது வசுந்தரா முகாமுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் பா.ஜ முகாம் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. காங்கிரஸ் முகாமில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் அந்த பட்டியல் வெளியாகலாம். அப்போது ராஜஸ்தான் தேர்தல் அனல் பறக்கும்.
* பாகிஸ்தான் பக்கத்தில் ஒரு பூத்
பாகிஸ்தானின் எல்லையில் உள்ள பார்மர் மாவட்டத்தில் மஞ்ஹோலி என்ற பூத் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 49 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இந்த பூத் பாகிஸ்தானில் இருந்து 5 கிமீ தொலைவில் மட்டுமே உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாகிஸ்தான் மற்றும் 5 மாநில எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளதால் ராஜஸ்தானில் 357 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.