ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். முதன் முதலாக அதிகாலை 4.10 முதல் 4.25 மணியளவில் ஜெய்ப்பூர் பகுதியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடைசியாக 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், கிட்டத்தட்ட அரை மணி நேர இடைவெளியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதம் அல்லது பொருட்சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மணிப்பூரில் இன்று அதிகாலை 3.1 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.