(வல்லாள கோபுரக் கதை)
மரணம் குறித்த மன்னரின் சிந்தனைக்கு மீண்டும் சல்லம்மா பதைத்தாள். “ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என விசும்பினாள். அவளை சமாதானம் செய்த மன்னர், தொடர்ந்து பேசினார். “மரணம்குறித்து அலறத் தேவையில்லை சொக்கி. வாழ்வில் வெற்றியையும், தோல்வியையும் சமஅளவில் பார்த்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். இங்கு மனிதர்கள் எல்லோரும், ஒருநாள் காலாவதியாகப் போகிறவர்கள்தான். வெறும் நினைவுகளாக மாறப் போகிறவர்கள்தான். அதுவும் பிறந்தநாள், இறந்தநாளன்று, வருடத்திற்கு இருநாள் மட்டும், நினைவுகூரப் படப் போகிறவர்கள்தான். இதுகூட சிலருக்கு மட்டுமே பொருந்தும்.
பெரும்பாலோருக்கு ஒருநாள் மட்டுமே லபிக்கும் என்பதே ஆகச் சிறந்த உண்மை. அப்போது, எப்படியான செயல் களால், மனிதர்கள் காலத்துக்கும் மக்கள் நினைவில் நிற்க முடியும்? இடைவிடாது போர்புரிவதாலா? மரங்கள் நடுவதாலா? ஏரி, குளம் வெட்டுவதாலா? வான்முட்டும் உயரத்தில் கோபுரம் எழுப்புவதாலா? இல்லை, என்னைப்போன்று இந்தக் கிழ வயதிலும் அரசனாக அமர்ந்திருப்பதாலா? எது நினைவில் நிற்கும்?. இல்லை, இங்கு எதுவும் நினைவில் நிற்காது.
காலத்தின் வேகத்தில், எல்லாமே, எல்லோர்க்கும் மறந்துபோகும்.இங்கு போரில் வெற்றி கண்ட அரசர்களில் எத்தனை பேரை, இப்போதும் மக்களுக்கு ஞாபகமிருக்கிறது? நிமிர்ந்து நிற்கிற பல கோயில்களில், தூண்கள் பக்கத்தில் ஆளுயரச் சிலையாய் நிற்பவர்கள் யாரென்பது, நம்மில் பல பேருக்குத் தெரியாது. மொட்டைக் கோபுரங்களை பார். தூர்ந்துபோய் கிடக்கிற ஏரி, குளங்களை பார். ராஜேந்திர சோழனின் அரண்மனை மாளிகை, இன்று வெறும் மண்மேடாகத்தான் காட்சியளிக்கிறது. காலம் எல்லாவற்றையும் இங்கு அரித்துவிடும் சொக்கி.
ஆனால், கடவுளுக்கு நெருக்கமானவர்களை மட்டும், கடவுளை உறவாக கொண்டவர்களை மட்டும், காலம், ஞாபகம் வைத்துக் கொள்ளும். அவர்களை மலையுச்சி விளக்காய் எப்போதும் காட்டும். ஒரு மன்னனாய் ராஜராஜ சோழனை இங்கு எல்லோரும் மறந்து போய்விட முடியும். ஆனால், பிரமாண்ட சிவலிங்கம் யோசித்த சிவபாதசேகரனை, எவரால் மறக்க முடியும்?
அதுபோன்றதுதான் இந்த செயலும். இது சற்று குழந்தைத்தனம்தான், ஏன், ஈசனை தன் மகனென கொள்கின்ற எனது இந்த செயலும் புத்தி பேதலித்த செயலாகக்கூட, பிறருக்கு தோன்றக் கூடும். அதில் எனக்கு வருத்தம்கூட இல்லை.
காரணம், வாலிபத்தில் தொடங்கி, இதோ, இந்த வயோதிகத்திலும் போர்க் களம் நிற்பவனாக, போராடுபவனாக, வெறும் போர் செய்கிறவனாக, தளராது, வடக்கத்தானை எதிர்த்தவனாக, அவனை எதிர்ப்பவர்களுக்கு படையுதவி செய்த வனாக, காலம் என்னை ஞாபகம் வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அதற்குமேலாக, நான் ஈசனுக்கு மிக நெருக்கமானவனாக, என் காலத்திற்கும் நினைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன்.
சுல்தானிடம் தோற்றுப்போய், பாண்டிய மன்னன் பரிசாக தந்த இம்மண்ணிற்கு, அகதிபோல குடிபெயர்ந்து வந்தவன்தான் நான். ஆனால், எதிரிக்கு மட்டுமல்ல, கடவுளுக்குகூட அடிமையாக நினையாமல் உறவாக வரித்துக்கொண்ட என்செயலை, இந்த அருணசமுத்திரம் என்றும் புறக்கணிக்காதிருக்கும். அது இந்த மலையை பார்க்கும்போதெல்லாம், அருணாச்சலேஸ்வரரை தன் மகனாக வரித்துக்கொண்ட என்னையும் மறக்காமல், நெடுங்காலத்திற்கு நினைவில் வைத்திருக்கும். நான் சொல்வது உனக்குப் புரியுமென நினைக்கிறேன்’’ என்ற மன்னர் மெல்ல பஞ்சணையில் சாய்ந்து கொண்டார்.
மன்னரின் பேச்சைக் கேட்ட சல்லம்மமா அதிர்ந்துதான் போயிருந்தாள். எப்போதும் கிண்டலும், கேலியுமாகவும், அரட்டையும், உற்சாகமுமாகவும் பேசுகின்றவர், முதன்முறையாக மரணம் குறித்து பேசியது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவள் முகம் பொத்தி விசும்பியழுதாள். அழுகிறவளை, “என்ன இது என்றபடி இழுத்தணைத்த மன்னர், ஆதரவாக அவளை தன்தோளில் சாய்த்து, அணைத்துக்கொண்டார்.
தோளில் சாய்ந்தபடியே அழுத சல்லம்மா, மன்னரின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, ‘எப்போதும் இப்படி பேசாதீர்கள். காலமெப்படி உங்களை மறக்கும்? அண்ணா மலையாருக்காக நீங்கள் கட்டுகிற கோபுரமுள்ளவரை, அது உங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளும்’ என்றாள். ஆனால், அண்ணாமலையாரின் கோபுரமுள்ளவரை மட்டுமல்ல, அதையும் தாண்டி, இந்தப் பிரபஞ்சம் முடியும்வரை, மன்னர் வீரவல்லாளனை, இந்த தமிழ்தேசம் மறக்க முடியாதபடிக்கு, காலம் வேறொரு திட்டம் வைத்திருந்தது. அவளுக்குத்தான் அது தெரியவில்லை. சில நாழிகையில் உறங்கிய மன்னரைவிட்டு நீங்கிய சல்லம்மா, அக்காள் மல்லம்மாவிடம் மன்னர் பேசியதை அழுதபடியே கூறினாள். தங்கையை அணைத்துக்கொண்டு சமாதானம் கூறிய மூத்தவள், ஆலோசனை கேட்டு குரு மடத்திற்கு கடிதமெழுதும்படி யோசனை கூறினாள்.
மறுநாளே மன்னரின் மனநிலையை தங்கள் ஜகத்குரு பண்டிதாராத்ய சுவாமி அவர்களுக்கு, விவரமாக, அவள் கடிதமெழுதியனுப்பினாள். இரண்டு நாள் கழித்து, ஆந்திரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆசிகள் கூறிய பட்டுத்துணிக் கடிதமும், பூஜிக்கப்பட்ட ரட்சையும், அட்சதையும் வந்து சேர்ந்தன. அக்காளின் விருப்பப்படி, சல்லம்மா குருமடத்தின் கடிதம் படித்தாள்.
“ஓம் ஸ்ரீ காயத்ரியை நம.ஸ்ரீமுகம்.
மனிதர்களின் துக்கமும், சந்தோசமும் எப்போதும் காலத்திற்கு புரிவதேயில்லை. அது, எவரது கவலைக்காகவும், உற்சாக கொண்டாட்டதிற்காகவும் நிற்பதேயில்லை. மனிதர்களை புறந்தள்ளிவிட்டு, அதுபாட்டிற்கு, தன்செயலை செய்தபடி நகர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால், சிலமனிதர்கள் மட்டும், காலம் தாண்டியவர்கள். மன்னர் வீரவல்லாளன் அப்படியானவர். இப்பிரபஞ்சசக்தியின் சந்தோசத்திற்காக பணிபுரிகின்ற அவருக்காக, அச்சக்தி, ஒருநாள் இறங்கி வரும். ஒருநாள் மட்டுமல்ல. இப்பூமியின் காலம் வரைக்கும், அவருக்காக இப்புழுதி மண்ணில் கால்பதிய நடக்கும். கவலை வேண்டாம். அவருக்கு ஒரு குறையு மேற்படாது. நம்மன்னர், காலம்தாண்டி ஜீவிக்கப் போகிறவர். அவர் ஸ்ரீஅண்ணாமலையானுக்கானவர். ஸ்ரீஅருணாசலேஸ்வரரோடு தொடர்ந்து பயணிக்கப் போகிறவர். ஹொய்சாலத்தின் பெருமை பரவட்டும். மன்னர் வீரவல்லாளனுக்கு புகழ் சேரட்டும். ஜெய் விஜயீ பவ.
ஸ்ரீ சூடாம்பிகை நமஹ என குரு மடத்தின் கடிதம் பேசியது. அக்காளும், தங்கையும் மனநிம்மதி அடைந்தார்கள். அந்த நிம்மதியோடு, அருணை மலையை நோக்கி, வணங்கினார்கள். ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் கருணை, மன்னரின் மீதும், இம்மண்ணின் மீதும் பெருகட்டும் என வேண்டிக்கொண்டார்கள். உண்மையில், ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரின் கருணை, அப்போது அருணை முழுமைக்கும் பெருகித்தான் இருந்தது. வழக்கத்தைவிட, அப்போது அருணையில் நல்ல மழை பெய்திருந்தது. நல்ல மழையினால் எல்லா பக்கமும் விளைச்சல் செழித்திருந்தது. விளைச்சல் செழித்திருந்ததால், பெரும் வருமானம் பெருகியது. பெரும் வருமானம் பெருகியதால், அருணை வாழ்மக்களின் வாழ்க்கை உற்சாகமாயிருந்தது. “இது நம் இளவரசர் அருணாச்சலேஸ்வரரின் தேசமல்லவா” என்கிற பெருமிதம், அருணை முழுக்க பரவியிருந்தது.
மக்களெல்லோரும் பௌர்ணமியில், தவறாது மலையைச்சுற்றி கிரிவலம் போனார்கள். அப்படிப் போகும்போது, அதே பௌர்ணமியன்று கோபுரப் பணிகளை, பல்லக்கில் பார்வையிடவரும், தங்கள் இளவரசர் அண்ணாமலையாரை, காத்திருந்து தரிசித்தார்கள். தரிசித்த பரவசத்துடன், கோபுரப் பணிகளுக்கான நன்கொடையை அள்ளியள்ளி வழங்கினார்கள். அதையும், தங்கள் பெயரால் தராமல், அண்ணாமலையாருக்காக தருகிற, “வல்லாளமகாராஜா வரி” என சந்தோசமாக தந்தார்கள். அந்த சந்தோஷத்தின் தொடர்ச்சியாக, காலப்போக்கில் ஹொய்சாலத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் வசூலிக்கப்படும் வரிகளெல்லாம், “வல்லாளதேவர் வரி” என்றே அழைக்கபட்டது.
மன்னர் வீரவல்லாளன் எழுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். மன்னர் வீரவல்லாளனை, மல்லம்மாவும், சல்லம்மாவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள். ஆனால், வயதால் தளர்ந்திருந்தாலும், மன்னர் உற்சாகமாகத்தான் இருந்தார். அடிக்கடி, படைவீரர்களின் பயிற்சிக் கூடத்திற்கு, தளபதிகளுடன் சென்று பார்வையிட்டார். சிலசமயங்களில் தானும் அவர்களோடு பயிற்சியில் ஈடுபட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார். அமைச்சர்களோடும், தளபதிகளோடும் எதிர்காலப் போர் வியூகங்கள் குறித்து விவாதித்தார். அதேசமயத்தில், போர் வியூகங்கள், ஆயுதப்பயிற்சி என்றிருந்தாலும், மன்னரின் தேடல் வேறுவிதமாக இருந்தது. அருணை மலைமீது தனியேபோய் அமர்ந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், தளபதி மாதப்பதண்ட நாயகரை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு, மன்னர் அருணை மலையேறினார். மலையில் வெகுதூரம் போகாமல், ஒரு
சுனைக்கு அருகிலிருந்த ஒரு குகைக்கு வெளியே, மாதப்பதண்ட நாயகரை காவலாக நிற்க வைத்துவிட்டு, அமைதியாக மௌனமாக கண்மூடி அமர்ந்து கொண்டார். மாலை, சூரியன் மேற்கே அடையும்முன், அரண்மனைக்கு திரும்பினார்.
இதற்கிடையே கிழக்குவாசல் கோபுரப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. அதற்குமட்டும் கோபுரக்கலசம் அமைத்து, விழா எடுப்பது சரியா? என குருமடத்திற்கு சந்தேகம் கேட்டு கடிதமெழுத, “கிழக்கு திசை என்பதால் கொண்டாடலாம். ஆனால் நான்குதிசை கோபுரங்களும் எழுப்பியபின் கொண்டாடுதல் இன்னும் சிறப்பு” என குரு மடத்திலிருந்து பதில் கிடைத்தது. அப்படியே செய்யலாம் என சபையில் முடிவெடுக்கப்பட்டு, கோபுரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மதில்சுவர் கட்டுமானப் பணிகள் விரைவாகமுடிக்க உத்தரவிடப்பட்டன.
ஆனால், ஒரு குறிப்பிட்ட நாளில், மன்னரின் எழுபத்தைந்தாவது வயது பூர்த்தி தினம் வர, அதுவே கும்பாபிஷேகம்போல கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அருணையே திமிலோகப்பட்டது. நகரே திருவிழாக்கோலம் பூண்டது. அதுவரைக்கும் அருண சமுத்திரம் என அழைக்கப்பட்ட அருணை, அன்று முதல் “அருணசமுத்திர வல்லாளப் பட்டினம்” என தன் பெயரை மாற்றிக் கொண்டது.
பிறந்த தினத்தன்று உற்சாகமாக மனைவியரோடு கோயிலுக்கு சென்று, ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு, கிழக்குகோபுரத்தை காணவந்த மன்னர், தான்மட்டும் இவீந்திரப் பெருந்தச்சரோடு மூங்கில் சாரமேறி, முதல் தளத்தில், தன் கனவுக் கதை சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டார். சந்தோஷமானார். அப்படியே கீழிறங்கி, வடக்கு நோக்கி, கைகள் கூப்பியபடி நிற்கும், கண் திறக்கப்படாத தனது சிற்பத்தைக் கண்டு மகிழ்ந்தார்.
நந்தி மண்டபத்து தூணுக்கருகே, தேவியரோடு தான் நிற்கும் சிலையைக் கண்டு நெகிழ்ந்தார். அந்த நெகிழ்ச்சியோடு இவீந்திரப்பெருந்தச்சரை அணைத்துக்கொண்டார். “அற்புதம் செய்திருக்கிறீர்கள் பெருந்தச்சரே” என்றவர், “மகன் விருபாக்ஷன் வடிவமும், ஒரு தூணில் இடம் பெறட்டும்” என்று காதில் கிசுகிசுத்தார். பின்னர், மனநிறைவோடு, எல்லோரையும் வாழ்த்திவிட்டு, விடைபெற்றார்.
அன்று முழுதும், மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்ட மன்னர் வீரவல்லாளன், அன்றே, அதுவரை எந்த தனியொரு மன்னனும் தந்திராத கொடையாக, தனது கைங்கர்யமாக, ஸ்ரீ அருணாச்சலேஸ்வரருக்கு, முப்பத்து மூன்றாயிரம் பொன்னை வழங்கினார். (அண்ணாமலையார் கோயிலில் இதற்கான கல்வெட்டு உண்டு). வழங்கிய கையோடு, சுற்றுவட்டார நிலவரி, மற்றும் கடைவரிகளை, கோயிலின் தினசரி வழிபாட்டுக்கும், பௌர்ணமி, பிரதோஷம், தீபத் திருநாள் மற்றும் திருவிழாக்காலங்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி தந்து உத்தரவிட்டார்.
(இதற்கும் கல்வெட்டுண்டு) காலம் நகர்ந்துகொண்டேபோனது. சாளுக்கியர்களும்,பாண்டியர்களும், மொத்தமாய் வீழ்ந்துவிட்ட நிலையில், தெற்குப்பகுதியில் சுல்தானை எதிர்க்கின்ற ஒரே பேரரசராக மன்னர் வீரவல்லாளன் மாறினார். அவர் தந்த படையுதவியின் தைரியத்தில், தென்னகத்தின் சிறுஅரசுகள் வலுவடைந்தன. பலஇடங்களில் வடக்கத்துப்படைகளை விரட்டியடித்து, தாங்கள் இழந்த பகுதிகளை யெல்லாம், மெல்லமெல்ல மீட்டெடுத்தன. முஸ்லீம் படைகளின் தொடர் தோல்விகளை கண்டு, அச்சமகன்ற மற்ற குறுநில மன்னர்களும், “கப்பம் கட்ட மறுத்து” மதுரை சுல்தானுக்கு கடிதமனுப்பினர்.
மொத்தத்தில், தென்னிந்தியாவின் ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாக, மதுரை சுல்தானின் அரசு, இழந்து கொண்டே வந்தது. இதற்கிடையே, முன்பு வீரவல்லாளனுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட அலாவுதீன் உத்தௌஜியின் மருமகனான குத்புதீன் மதுரை சுல்தானாக பதவியை ஏற்றுக்கொண்டான். தனது அரசின் தொடர் தோல்விகளால் கோபமாகிய அவன், கப்பம் கட்ட மறுத்தவர்கள் மீது படையெடுத்தான். ஆனால், நடந்த போரின்போது, தான் பதவியேற்ற நாற்பதாம் நாளே, போர்க் களத்தில் கொல்லப்பட்டான்.
அவனுக்குப் பிறகு கியாஸ் உதீன் தம்கானி என்பவன் பதவியேற்றான். மதுரை சுல்தான்களில் அரக்கனைப் போன்றவன் என வரலாற்றால் குறிப்பிடப்படுகிற அவன், பதவியேற்ற அன்றே, தான் படையெடுத்து அழிக்க வேண்டிய நாடுகளின் பெயர்களையும், வென்றபின் கொடூரமாக கொல்ல வேண்டிய மன்னர்களின் பெயர்களையும் வரிசையாக எழுதிப் பார்த்தான். அதில், அருணை சமுத்திரமும், மன்னர் வீர வல்லாளன் பெயரும், முதலில் இருந்தது.
(அடுத்த இதழில்…)
குமரன் லோகபிரியா