பகுதி 2
‘‘ஏனில்லை, வழியுண்டு’’ என்ற குரல்வந்த திசைநோக்கி, மொத்தபேரும் திரும்பியதுண்டு, மன்னர் வீரவல்லாளன் ஆவலுடன் திரும்பிப்பார்த்தார். அங்கு பச்சைநிற கண்டாங்கிசேலையணிந்து, முந்தானையை அழகாக, அதேநேரத்தில் அலட்சியமாக, முழங்கையில் ஒருசுற்று சுற்றிக்கொண்டு, கம்பீரமாக நின்று கொண்டிருந்த சல்லமாதேவியை கண்டார். கழுத்தை நெருக்கியிருந்த அட்டிகையால் மிக அழகாகவும், சற்றுஉயரமாக தூக்கிக்கட்டிய கொண்டையால், மேலும் கம்பீரமாகவும் தெரிந்தவளைக் கண்டு விழிகள் விரித்து வியப்பானார்.
மன்னர் தன்னைநோக்குவதை கண்ட சல்லமாதேவி, அவரை வணங்கினாள்.சல்லமாதேவியின் பணிவை ஏற்ற மன்னர், காதலுடன் புன்னகைத்தார். இளையராணியின் பதிலில் ஆர்வமாகி, ‘‘என்ன வழியிருக்கிறது சொக்கி?’’ என்றார். சொக்கி என்கிற சொல்லுக்கு, மெலிதாக வெட்கப்பட்டு, தலைகுனிந்து சிரித்த இளையராணி, தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
‘‘சொல்கிறேன் அரசே. முதலில் சபையோர் இதற்கு பதில் சொல்லட்டும். எல்லோராலும் கோபுரம் கட்ட இயலுமா?’’கேள்விபுரியாமல் சபை முழித்தது.
‘‘சொல்லுங்கள். எல்லா மன்னராலும் கோபுரம் எழுப்பமுடிந்ததா?’’
இதற்கும் என்ன பதில்சொல்வதென தெரியாமல் சபை, ‘‘அதுவந்து’’ என இழுத்தது.இளையராணி கம்பீரக்குரலில் பேச ஆரம்பித்தாள். ‘‘முதலில் சபையென்பது, ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்வதற்கே தவிர, தடை சொல்வதற்கல்ல. அப்படி தடைசொல்வதாயிருந்தால், பொருத்தமான காரணமிருக்க வேண்டும். நான்கு கோபுரம் கட்டுதல் பெருஞ்செலவு என்று தடைகூறினால், அதுகூட ஒருவகையில் நியாயம். ஆனால், கட்டுவதே தவறென்று சொல்வது, சற்று அவசரக்குடுக்கை சொல்.’’ என சீறினாள். சபை தலைகுனிந்தது…
‘‘இந்த தென்னாடு, ஈசனின்தேசம். இங்கு எல்லோராலும் அவனுக்கு கோயில் கட்டமுடிந்ததா? எல்லா மன்னராலும் கோபுரம் எழுப்ப முடிந்ததா? இவ்வளவு ஏன்? செங்கல் தளியை, கற்றளியாக மாற்றிய சோழமுப்பாட்டனரால், ஏன் கோபுரம் கட்டஇயலவில்லை. அருணாச்சலேஸ்வரருக்கு முதன்முதலாக கொடிமரம் அமைத்துத்தந்த, கிளிகோபுரம் கட்டிய ராஜேந்திரரால்கூட, ஏன் நான்கு திசைகளிலும் கோபுரம் கட்டஇயலவில்லை. அவர் திரட்டாத செல்வமா? அவரிடமில்லாத ஆள்பலமா? அவருக்கு பின்வந்த மன்னர்களால்கூட, நால்வராலும் பாடப்பெற்ற இந்தத்தல ஈசனுக்கு, கோபுரங்கள் அமைக்க முடிந்ததில்லை. எழுப்ப முடியாதபடிக்கு, அவர்களுக்கும் நிதிவசதி இல்லையாயென்ன?’’ ஏன் எல்லோரும் மௌனமாக இருக்கிறீர்கள்.’’
‘‘ஓ…கடந்த காலங்களை மையமாகவைத்து எழுப்புகிற கேள்விகள் உங்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. சரி, உங்களின் சமகால அனுபவங்களிருந்தே என் கேள்வியை கேட்கிறேன். போரில் தோற்று, நம்மிடமிருந்த மொத்த செல்வத்தையும் இழந்து, தலைநகர் விட்டு நகர்ந்து, இங்கு வந்தபின், ‘‘காசிருந்துதான் இந்த அரசிற்கு தேவையான கட்டுமானப்பணிகளை முடித்தீர்களா? அதற்கு உங்களிடம் காசிருந்ததா?’’அதுவரை தலைகுனிந்தபடியே இருந்தசபை, சட்டென சல்லமாதேவியை நிமிந்து பார்த்து, ‘‘இதென்ன புதுக்கேள்வி’’ என்று முழித்தது. இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, விழிபிதுங்கியது.
‘‘நிதிவசதி தானில்லையே எப்படி நடந்தது? இந்த அரண்மனை, கோட்டைச்சுவர், குதிரைக்கொட்டி, நெற்களஞ்சியஅறை, அரசுநிர்வாகக் கட்டிடங்கள், இவையெல்லாம் எப்படி எழும்பியது? கஜானா காலியானசமயத்தில் எப்படி நிகழ்ந்தது? சுண்ணாம்புக்கல் சுமந்தவனுக்கும், சாந்துகுழைத்து சுவரெழுப்பியவனுக்கும், அவன் குடும்பத்தாருக்கும், காசா கொடுத்தீர்கள்? பசிக்கு, வெறும் கேப்பையையும், நெல்லையும் தானே கூலியாகக் கொடுத்தீர்கள். பின் எப்படியெழும்பியது.’’
கேள்விகளால் சவுக்கடி வாங்கியவலியில், மொத்தசபையும் மேலும் அமைதியாக நின்றது.‘‘நான்சொல்லட்டுமா? இது மொத்தமும் எளியமக்களின் ராஜவிசுவாசம். மன்னர்மீது அவர்கள் கொண்ட மாறாதஅன்பு, தங்களரசனுக்காக, தங்களோடு திண்ணையிலுறங்கிய மன்னனுக்காக, எதையும் எதிர்பாராத ஜனங்களின் கடும் உழைப்பு. அவர்கள் கல்சுமந்தார்கள். சூளைசெங்கல் வேகவைத்தார்கள். ஊறவைத்த கடுக்காய்நீரில், கைத்தோலுரிய களிமண்சாந்து குழைத்தார்கள். குழைத்த சாந்தோடு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து, சுவர் பூசினார்கள். சுண்ணமும் வண்ணமும் கலந்தடித்தார்கள். மரங்களறுத்து, சாளரமும், கதவுகளும் செய்தார்கள். குடிநீர் வசதிக்காக, புதிதாக குளங்களையும், ஏரிகளையும் வெட்டினார்கள்.
காலையும், மாலையும், தூரத்து பாலாற்றிலிருந்து வண்டிமாட்டில் நீர் சுமந்து வந்த வேளாள ஜனங்களையும், கோட்டைப் பாறையிடுக்கில் பூசும் களிமண்சாந்திற்காக, புற்றுமண் தேடி, காடுகளிலலைந்து, கூடைகூடையாக தலைமேல் சுமந்து வந்து கொட்டிய குடியானவமக்களையும் உங்களில் எத்தனைப் பேருக்கு இங்கு தெரியும்? நீங்கள் அவர்களின் உழைப்பிற்கு கூலியாக, வெறும் நெல்லைத்தானே கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் தங்கள் மன்னனுக்காக உயிரைத்தவிர, மொத்தமும் கொடுத்தார்கள். பேயாய் அலைந்து, நாயாக உழைத்தார்கள்.’’
‘‘மன்னனுக்கான பணிக்கே இப்படி உழைத்தார்கள்யென்றால், இது மகேசனுக்கானபணி. ஏன் நிகழாது? மன்னனுக்காக சுண்ணாம்புக்கல் சுமந்த மக்கள், அவர்களின் சிவனுக்காக பாறை சுமக்கமாட்டார்களா? வரிசையாக சாளரமேறி, பாறையை மேலே ஏற்றமாட்டார்களா? ஸ்தபதிகள் சிற்பங்கள் செய்ய மாட்டார்களா? இந்த அருணாசலந்து ஈசனுக்காக, நானே அரசியென்ற கர்வமின்றி, முதல் ஆளாய் தலையில் சும்மாடு வைத்து பாறைசுமப்பேன். மக்கள் செய்யமாட்டார்களா.?
இந்த நிர்வாகம் வேலைப்பளு சுமக்கத் தயங்குகிறதோ என நான் சந்தேகிக்கிறேன். ‘‘இப்போதெதற்கு இவ்வளவு பெரியசுமை?’’ என சோம்பலாய் யோசிக்கிறதோ என
அஞ்சுகிறேன். அதற்காகத்தான், ‘‘காசில்லை, கஜானா காலியென கதைசொல்கிறதோ’’வென நான் கவலையுறுகிறேன்.‘‘ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். அதுவே ஆசைப் பட்டாலொழிய, ஒரு புல்லைக்கூட அதன்பாதத்தில் நீங்கள் சமர்பிக்க முடியாது.
‘‘அவனருளாலே அவன் தாள்பணிந்து’’ என்கிற மாணிக்கவாசகச் சொல் சத்தியம். இந்த கோபுரக்கட்டுமானம் தெய்வ எண்ணம், இப்படி ஒரு எண்ணம் மன்னருக்குள் எழும்பியிருப்பது, ஈசனின் ஆசை. காலம் நமக்கு, அதற்கொரு வாய்ப்பை தருகிறதெனில், மன்னரின் எண்ணத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, அதற்கு தக்கத்தீர்வை சொல்லுங்கள். அதைவிடுத்து, காசை காரணம் சொல்லாதீர்கள்.’’ என எச்சரிப்பதுபோல விரல்நீட்டிப் பேசினாள். அவளால் பேச்சுமூச்சற்றுப் போன சபையை அலட்சியமாக நோக்கியவள், மூத்த அமைச்சர்கள் பக்கம் திரும்பி, ‘என்பேச்சில் பிழையிருந்தால், பெரியோர்கள் என்னை மன்னிக்க’’ என கைகள் கூப்பினாள்.
இடைவௌிவிடாது தொடர்ச்சியாக பேசிய இளையராணியை, எல்லோரும் வியப்பாக பார்த்தபடியே இருந்தார்கள். அங்கு பெரும்மௌனம் நிலவியது. அந்தமௌனத்தை உடைக்கும் விதமாய், பட்டத்தரசி மல்லம்மாதேவி தன் தங்கையை பாராட்டும் விதமாக, முதல் ஆளாய் எழும்பி நின்று, உற்சாகமாக கைகள் தட்டினார். அரசியின் செய்கையால் உற்சாகமாகி, பணிப்பெண்கள் அனைவரும் கூச்சலுடன் கைகள் தட்டினார்கள். அவர்களைத் தொடர்ந்து, மொத்தசபையும் எழுந்து நின்று கைகள் தட்டியது.
அனைவரும் தன் காதல் மனைவியை பாராட்டுவதை கண்டு மகிழ்ந்த மன்னர், தானும் எழுப்பி, உரத்த குரலில் ‘‘சபாஷ் சொக்கி’’ என்றபடி, அட்டகாசச்சிரிப்போடும், பெரும் புன்னகையோடும், எல்லோரையும் விட வேகமாக கைகள் தட்டினார். எல்லோருடைய பாராட்டையும் கம்பீரமாக ஏற்றுக் கொண்ட சல்லம்மாதேவி, மன்னரின் செய்கைக்கு வெட்கத்தால் தவித்தாள். நிற்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் நெளிந்தாள். தங்கையின் அவஸ்தையைக் கண்டு, மூத்தராணி மல்லம்மாதேவி வாய்விட்டு சிரித்தார். தொடர்ச்சியாக கைகள்தட்டிய மன்னர் வீரவல்லாளன், கைதட்டுவதை நிறுத்திவிட்டு, சல்லமாதேவியை கைகள்தூக்கி, மனதார ஆசிர்வதித்தார். மன்னரின் செய்கையை தொடர்ந்து மொத்தசபையும், ‘‘வாழ்க இளையராணி’’ என, பெருங்குரலில் யானைபோல் பிளறியது. வாழ்த்தொலி அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று.
மன்னர் வீரவல்லாளன் இருகைகளையும் தூக்கி, அனைவரையும் அமைதியாகும்படி சைகை செய்தார். சில நொடிகளில் சபை அடங்கி, அமைதியாகியது. வீரவல்லாளன் இளையராணியை நோக்கிப் புன்னகைத்தபடி, ‘‘எல்லாம்சரி, ஆனால் நீ இன்னும் வழியை சொல்லவில்லை சொக்கி’’ என கிண்டலடித்தார்.சில நொடிகள் மெளனமாக நின்ற சல்லம்மாதேவி, ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தாள். ‘‘இந்த அருணைமண், உயிராற்றலுடன் துடிக்கின்ற ஜீவன்.
அதற்கு நெருப்புமலையாய் நிற்கும், இந்த மலையே சாட்சி. நம்மையாளும் ஈசன் உயிர்ப்புடன் ஜீவித்திருக்கிற நிலமிது என்கிற என் கருத்தை, இங்கு என்னோடு மாற்று கருத்துள்ள வரும்கூட மறுக்க மாட்டார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அப்படியான இந்த நிலத்தில் கோபுரம் அமைப்பது, அந்த ஜடாமுடி ஈசனுக்கு கிரீடம் வைப்பதற்கு நிகரானது. ஆகவே கோபுரம் அமைக்கும்பணியை தயங்காமல் செய்யத்துவங்கலாம். செய்யத் தயங்கும் படியான பெரும்செலவுகள் தற்போதைக்கு நம் அரசுக்கில்லை.
அரசுக்கும், அரச குடும்பத்தினருக்கும் தேவைக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடித்து விட்டோம். பாலாற்றின் குறுக்கே கடப்பதற்காக, நீளமான மரப்பாலம் அமைத்து முடித்திருக்கிறோம். ஆங்காங்கே சிறுபாலங்களுக்கான பணிகளையும், விவசாயத்துக்கான மராமத்து பணிகளையும், மக்களுக்கான குடிநீர் வசதிகளுக்காக, குளம், ஏரிகளை தூர்வாருதல் பணிகளையும், நிறைவாக செய்திருக்கிறோம். வடக்கிற்கான கப்பத்தொகையினையும், இப்போதுதான் நாம் செலுத்தியிருக்கிறோம். அடுத்தவருடம் வரை, அந்ததொந்தரவும் நமக்கில்லை.
எனவே தாராளமாக கோபுரத்தின் கட்டுமானப்பணிகளை துவங்கலாம். ‘‘ஆனால், நான்கு திசைகளிலும் கோபுரங்கள் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். இந்த இடத்தில் சபையினரின் கவலையில், நான் சற்று உடன்படுகிறேன். இது நிச்சயம் டெல்லி சுல்தானின் கண்ணை உறுத்தத்தான் செய்யும். புதுதலைநகரில் காசுநிறைய புரள்கிறதோ என ரகசியமாக நம்மை உளவு பார்க்கத்தான் சொல்லும். முதல் கவனம், இங்குதான் நமக்குத் தேவை.’’‘‘அப்போது கோபுரத்திட்டத்தை, கைவிட்டுவிடலாமா?’’ வயதான மூத்த அமைச்சரொருவர், தாடியை நீவி
விட்டபடி, கேள்வி கேட்டார்.
(தொடரும்)
குமரன் லோகபிரியா