சென்னை : மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக நிர்வாகி எச். ராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பழங்காநத்தத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச். ராஜா, மத மோதலை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஹெச். ராஜா மீது, பொது அமைதியை சீர்குலைக்க முயலுதல், தவறான தகவல் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் ஹெச். ராஜாவுக்கு சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை எதிர்த்து ஹெச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சம்மனை ரத்து செய்ய முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சம்மனை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.