பொள்ளாச்சி : பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு மருத்துவமனை கட்டிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பெரிய தாலுகாவில் ஒன்றான பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. நகர் மட்டுமின்றி கிராமங்களில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நோயுற்றால், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க, பொள்ளாச்சி மையப்பகுதியான ராஜாமில் ரோட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.
இம் மருத்துவமனை தினமும் காலை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. இதனால், அவ்வப்போது விவசாயிகள் தங்கள் கால்நடைகளை, இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று வந்தனர்.
கால்நடை மருத்துவமனை அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால், நாளடைவில் இந்த கால்நடை பராமரிப்புத்துறைக்குட்பட்ட மருத்துவமனை அலுவலக வளாகங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைய துவங்கியது.
இந்த அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள குடியிருப்புடன் கூடிய கட்டிடம் தற்போது சிதிலமடைந்து அதனை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்துள்ளது. இதனால், பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனைக்கு, அண்மை காலமாக விவசாயிகள், தங்கள் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருவதை குறைத்து கொண்டனர்.எனவே, கால்நடை பராமரிப்புத்துறைக்குட்பட்ட மருத்துவமனையை சுற்றிலும் உள்ள புதர்களை அப்புறப்படுத்துவதுடன், அலுவலக கட்டிடங்களை புனரமைக்க வேண்டும் அல்லது புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டி, கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.