குன்றத்தூர்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மழைக்காலங்களில் போரூர் ஏரி நிரம்பி, தண்ணீர் ஊருக்குள் செல்வதை தடுக்கும் வகையில், போரூர் ஏரியில் தண்ணீர் தேக்கி வைப்பதற்காகவும், ஏரியை மேம்படுத்தவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, போரூர் ஏரியை மேம்படுத்தும் பணி தொடங்கி, தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணியினை தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், சிறப்பு தலைமை பொறியாளர் கண்ணன், செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.