சென்னை: மழை பாதிப்பு பணிகளுக்காக மொத்தம் 23 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் உள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மேயர் பிரியா, மழை பாதிப்பு பணிகளுக்காக மொத்தம் 23 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். காவல்துறை, தீயணைப்புத்துறை என அனைத்து துறை ஒருங்கிணைந்த மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 100 hp திறன் கொண்ட மோட்டார்கள் தயாராக உள்ளன. தேங்கும் மழைநீரை வெளியேற்ற 845 மோட்டார் பம்புகள். 446 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.