திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று மாலைக்கு பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் 16 ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக பெய்து வரும் மழை இன்றும் தொடர்கிறது. இன்று இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலைக்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததில் திருவனந்தபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. சிறையின்கீழ், கழக்கூட்டம், வேளி உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் மரங்கள் விழுந்ததில் நேற்று இரவுக்குப் பின்னர் திருவனந்தபுரம்-கொல்லம் இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-கோழிக்கோடு ஜனசதாப்தி, திருவனந்தபுரம்-எர்ணாகுளம் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-கொல்லம் மெமு, புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ், கத்ரா-கன்னியாகுமரி ஹிமசாகர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்பட 16 ரயில்கள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்று காலை 5.55 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதற்கிடையே கேரளாவில் மேலும் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று எர்ணாகுளம், கண்ணூர் உள்பட 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.