சென்னை: தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை சில மாநிலங்களில் மட்டும் விடைபெற்ற நிலையில், தெற்கு அரபிக் கடல் பகுதியில் இன்னும் நீடித்து வருகிறது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருப்பூர், திற்பரப்பு, தம்மம்பட்டி, திருவாடணை, களியல், தீர்த்தாண்டதானம் ஆகிய இடங்களில் 80மிமீ மழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி, கரூர்,மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் வெப்ப நிலை குறையத் தொடங்கியுள்ளது. மேலும், தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.